தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளுமான இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி மற்றும் விவேக் ஆகியோர் இணைந்து நடித்த வை ராஜா வை படத்தை இயக்கினார்.

தொடர்ந்து சினிமா வீரன் எனும் டாக்குமென்டரி திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடைசியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு முஸாஃபிர் எனும் புதிய மியூசிக் வீடியோ ரிலீஸ் ஆனது. காதலர் தினத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ரொமான்டிக்கான இந்த பாடல் தமிழில் பயணி என்ற பெயரில் வெளிவந்தது. இசையமைப்பாளர் அனிருத் பாடிய பயணி பாடல் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது பாலிவுட் திரையுலகில் இயக்குனராக களமிறங்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ சாதி சால் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

க்ளவுட் 9 பிக்சர்ஸ் சார்பில் மீனு அரோரா தயாரிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ஓ சாதி சால் திரைப்படம் முழுக்க முழுக்க காதல் படமாக தயாராகிறது. தற்போது இத்திரைப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.