மிகச் சிறந்த இயக்குனராக தனக்கே உரித்தான பாணியில் ரசிகர்களின் நெஞ்சை விட்டு நீங்காத திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது சகோதரரும் நடிகருமான தனுஷுடன் இணைந்துள்ள திரைப்படம் நானே வருவேன். சமீபத்தில் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சிறந்த இயக்குனராக நல்ல படைப்புகளை வழங்கி வந்த இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராக புது அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் (ஏப்ரல் 13) வெளிவந்து மெகா ஹிட்டான பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

முன்னதாக இயக்குனர் செல்வராகவன் முதல்முறை நடிகராக களமிறங்கிய திரைப்படம் சாணிக் காயிதம். ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள சாணிக் காகிதம் திரைப்படம் இன்று மே 6-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

விமர்சன ரீதியாக பலரது பாராட்டுக்களையும் பெற்ற சாணிக் காயிதம் படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் தனுஷ் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒட்டுமொத்த சாணி காகிதம் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு செல்வராகவன் & கீர்த்தி சுரேஷ் உட்பட நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளதாகவும் இயக்குனர் அருண் மாதேஸ்வரனை நினைத்துப் பெருமை கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். சாணிக் காயிதம் படக்குழுவினரை பாராட்டி நடிகர் தனுஷ் பதிவிட்ட ட்வீட் இதோ…