கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்த டிமான்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அஜய் ஞானமுத்து. திகில் திரைப்படமான இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்பு அதர்வா, நயன்தாரா அனுராக் கஷ்யப் வைத்து இமைக்கா நொடிகள் என்கிற படத்தை இயக்கினார். இயக்குனருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி தந்தது இப்படம். 

தற்போது சியான் விக்ரம் வைத்து கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் மீதியுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது. இந்த படத்தின் முதல் பாடல் தும்பி துள்ளல் பாடல் சில நாட்கள் முன்பு வெளியாகி அசத்தி வருகிறது. ஷ்ரேயா கோஷல் மற்றும் நகுல் அப்யங்கர் பாடியுள்ள இந்த பாடல் வரிகளை விவேக் மற்றும் ஜிதின் ராஜ் இணைந்து எழுதியுள்ளனர். 

லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் அஜய் ஞானமுத்து, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர், சூர்யா அண்ணா பற்றி சொல்லுங்க என்று கூறியதற்கு, நடிகர் சூர்யாவுடன் 7-ஆம் அறிவு படத்தில் பணிபுரிந்துள்ளேன். அவர் மிகவும் அர்ப்பணிப்பாக இருப்பார். அவருடைய கவனம் மற்றும் கமிட்மென்ட்டை பார்த்து வியந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் அஜய் ஞானமுத்து. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள். AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் அஜய் என்பது குறிப்பிடத்தக்கது.