நெய்வேலி என்.எல்.சி. 2 வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 6 ஊழியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 17 பேர் காயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம், மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.  அங்குள்ள 7 அலகுகள் மூலம் ஆயிரத்து 470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த மின்சாரம், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை அங்குள்ள 2 வது சுரங்கத்தில் அதிக கொதிகலன் கொண்ட பாய்லர் திடீரென்று வெடித்து தீ பரவி உள்ளது. இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, இந்த விபத்தில் சில ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், இந்த விபத்தில் சுமார் 22 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்களையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சில தொழிலாளர்களின் நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளதால், அவர்களில் கடலூர், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்களில் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களான பத்மநாபன், அருண், வெங்கடேசன், நாகராஜன், சிலம்பரசன் உள்ளிட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்து உள்ளனர். இதில், இன்னும் சில தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயர கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

குறிப்பாக, படுகாயமடைந்த ஊழியர்களுக்குப் பாதிப்பு பெரிய அளவில் இருப்பதால், அந்த 17 பேரையும் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனைத் தொடர்ந்து, என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து உயிர் இழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், தொழிற்சங்கத்தினர் தற்போது அனல் மின் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்போது பேசிய சிலர், நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், கொதிகலன்கள் பழுதடைந்து அவ்வப்போது இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

மேலும், கடந்த மாதம் 7 ஆம் தேதி இதே அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டு, தற்போது 6 பேர் உயிரிழந்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். 

இதனால், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் முன்பு பதற்றமா சூழைல் நிலவுகிறது. அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், விபத்து நடந்த பகுதி மற்றும் விபத்தில் சிக்கியவர்களைப் பார்க்க அனுமதிக்கும் படி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் முன்பு, ஆம்புலன்சை மறித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

“என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது என்றும், இந்த விபத்து தொடர்பாக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக” முதலமைச்சர் பழனிசாமியிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். அதே போல், காயமம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்றும், மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.