அரசு அலுவலகத்தில் பெண் ஊழியரை உயர் அதிகாரி ஒருவர் இரும்பு கம்பியால் கடுமையாகத் தாக்கிய சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாநில சுற்றுலாத் துறை விடுதியில் துணை மேலாளராக பாஸ்கர் ராவ் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில். ஒப்பந்த ஊழியராக உஷாராணி என்பவர், வேலை பார்த்து வருகிறார். 

இதனிடையே, வேலை விஷயமாக இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, “மாஸ்க் அணிந்து விட்டு என்னிடம் பேசுங்கள்” என, உயர் அதிகாரி பாஸ்கர் ராவிடம், ஒப்பந்த ஊழியரான உஷா ராணி கூறியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, கடும் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் ராவ், அந்த இளம் கடும் பெண்ணிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றிய நிலையில், கடும் கோபமடைந்த துணை மேலாளர் பாஸ்கர் ராவ், உஷா ராணியின் தலை முடியைப் பிடித்து அடித்து கீழே தள்ளினார். இதில் அந்த  பெண் அலறித் துடித்து கீழே சரிந்து விழுகிறார். ஆனாலும், அப்போதும் கோபம் அடங்காத அந்த அதிகாரி, அந்த மேஜையின் மீது உள்ள இரும்பு கம்பியை எடுத்து, அந்த பெண்ணை கடுமையாகத் தாக்குகிறார். 

அப்போது, எங்கிருந்தோ ஓடி வந்த வயது முதிர்ந்த அதிகாரி ஒருவர், பாஸ்கர் ராவை அடிக்க விடாமல் தடுக்கிறார். அப்போது, அவர் அந்த வயதான அதிகாரியிடம் மல்லு கட்டும்போது, அந்த வயது முதிர்ந்த அதிகாரியும் நிலை தடுமாறி கீழே விழுகிறார்.

இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாஸ்கர் ராவ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

இதனிடையே, ஆந்திராவில் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பேச வேண்டும் என கூறிய பெண் ஊழியரை, அரசு சுற்றுலாத்துறை உயர் அதிகாரி ஒருவர் கடுமையாகத் தாக்கிய சம்பவம், அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி தற்போது வெளியாகி உள்ளது. இதனால், அந்த அதிகாரிக்கு மேலும் சிக்கில் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், கோவையில் பள்ளி மாணவனைக் காவல் துறையினர் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கோவை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை ரத்தின கிரி பகுதியில் இரவு நேரத்தில் டிபன் கடை நடத்தி வந்தவர்களிடம், அங்கு ரோந்து வந்த அப்பகுதி உதவி ஆய்வாளர் செல்லமணி, கடையை மூடும்படி கூறி, ஒரு பெண் மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதை, அந்த பெண்ணின் மகன் சிறுவன் ஒருவன், தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த போலீஸ் அதிகாரி, அந்த மாணவனின் செல்போனை பறித்துக்கொண்டு வாகனத்தில், அந்த சிறுவனை போலீஸ் நிலையம் அழைத்துச் செல்ல முற்படுகிறார். 

அப்போது மாணவன், போலீசாரின் இருசக்கர வாகனத்தில் இருந்த சாவியை எடுத்து விடுகிறான். இதனால், அந்த போலீஸ் அதிகாரி கீழே விழுவது போல் தடுமாறுகிறார். இதனால், ஆத்திரமடைந்த அந்த போலீசார், அந்த சிறுவனை அந்த தாயரின் முன்னிலையிலேயே கடுமையாகத் தாக்குகிறார். இதனால், அழுது கத்தி கூச்சலிட்டு அந்த தயார் போலீசாரிடம் கெஞ்சி, தனது மகனை விடுமாறு ஆழுகிறார். இந்த காட்சிகள் அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் எல்லா ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இந்த காட்சிகளைப் பார்த்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, கோவை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, சாத்தான் குளம் சம்பவம் போலீசாருக்கு பெரிய தலைவலியாக இருக்கும் நிலையில், தற்போது கோவையில் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தில், கோவை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது, போலீசாருக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த காவலரின் வாகனம் ஒன்று முதியவரின் சைக்கிளில் இடித்து சேதமாக்கி, அந்த முதியவரை போலீசார் தாக்குகின்றனர். இந்த காட்சிகளும் தற்போது இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால், போலீசார் நிலை குலைந்துபோய் உள்ளனர்.

மேலும், சென்னை அண்ணா நகரில் மாத்திரை வாங்கச் சென்றவரை, போலீசார் சிலர் சேர்ந்து தாக்கி விட்டு, அவரை தரதரவென இழுத்துச் சென்ற விவகாரமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், அந்த இளைஞர் ஊரடங்கை மீறியதற்காக நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், அவரை தாக்கி காவல் நிலையம் அழைத்துச் செல்வது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.