விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராகவும் சீரியல் நடிகராகவும் கலக்கிய கவின், பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி, சின்னத்திரையின் வாயிலாக தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். 

இதனையடுத்து தமிழ்த் திரையுலகிலும் நடிகராக களமிறங்கிய கவின், சத்ரியன் & நட்புனா என்னனு தெரியுமா ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக கவின் நடித்த லிப்ட் திரைப்படம் கடந்த ஆண்டு (2021) நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இதனைத் தொடர்ந்து கவின் கதாநாயகனாக நடித்த ஆகாஷ் வாணி வெப்சீரிஸும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஊர்க்குருவி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் கவின், முன்னதாக இயக்குனர் கணேஷ்.கே.பாபு இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் டாடா.

அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ள டாடா படத்தில் இயக்குனர் கே.பாக்கியராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழில் அரசு.K ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

டாடா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே டீசர், ட்ரைலர் & ரிலீஸ் தேதி குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Waiting to see you soon :)#Dada wrap! pic.twitter.com/zr968Byl0Z

— Kavin (@Kavin_m_0431) September 18, 2022