தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வளர்ந்து வந்த நடிகை தீபா என்கிற பவுலின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான துப்பறிவாளன் திரைப்படத்தில் துணை நடிகையாக சிறிய கதாபாத்திரத்தில் தீபா நடித்துள்ளார்.

இதனையடுத்து இயக்குனர் மஹி வர்மன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்த வாய்தா திரைப்படத்தில் தீபா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை தீபா தற்போது தற்கொலை செய்து கொண்டது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகை தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதே ஆன நடிகை தீபா காதல் தோல்வியின் காரணமாக வீட்டில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை தீபாவின் தற்கொலையை தொடர்ந்து அவர் எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட நடிகை தீபாவின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.