கன்னட மொழியில் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ ராமையா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் பெங்களூரு சந்தியா கிரானா ஆஷ்ரமத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடையும் போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் அமைவது வழக்கம். ஆனால் நடிகை ஜெயஸ்ரீக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியடைந்து தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை குறித்து ஜெயஸ்ரீ ராமையா வெளியிட்டிருந்த பதிவைப் பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் அவரை தேற்றினார். அதற்கு பின்னரும் கூட அவர் குடும்பத்திலிருந்து விலகி தனிமையில் இருந்ததாக அவரது நண்பர் ஷில்பா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில் திங்களன்று குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுக்கு பதிலளிக்காததால் ஆஷ்ரமத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இதையடுத்து ஜெயஸ்ரீ ராமையா மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதை ஆஷ்ரம நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து மதனயகனஹல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏன் ஜெயஸ்ரீ இந்த அவசரம், வேலை மட்டுமே வாழ்க்கை இல்லை என்று சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயஸ்ரீயின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். கடந்த ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை, அதன் பின் சின்னத்திரை நடிகை சித்ரா என தொடர்ச்சியாக திரை பிரபலங்களின் தற்கொலை செய்திகள் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.