தமிழ் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக நல்ல தரமான திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் தனது தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர். தொடர்ந்து நீர்ப்பறவை & தர்மதுரை என நல்ல படங்களை வழங்கி வருகிறார்.

அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் நடித்துள்ள இடிமுழக்கம் திரைப்படம் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

YSR புரொடக்ஷன்ஸ் சார்பில் யுவன்சங்கர் ராஜா தயாரிக்க, ஸ்டூடியோ 9 சார்பில் RK.சுரேஷ் அவர்கள் வெளியிட்டுள்ள மாமனிதன் திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து காயத்ரி, குரு சோமசுந்தரம் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். மாமனிதன் படத்திற்கு இசைஞானி இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

விமர்சன ரீதியாக அனைவரது பாராட்டுகளையும் பெற்று வரும் மாமனிதன் திரைப்படத்தை கண்டு ரசித்த இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இயக்குனர் சீனுராமசாமி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். சிறந்த படத்தை இயக்கியுள்ள சீனு ராமசாமி அவர்களை நேரில் அழைத்து பாராட்டிய இயக்குனர் பாரதிராஜா அவர்கள், இயக்குனர் சீனுராமசாமி "என் மகன்" என புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.