தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அறிவழகன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் ஆதி கதாநாயகனாக நடிக்க வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த ஈரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தொடர்ந்து நடிகர் நகுல் கதாநாயகனாக நடித்த வல்லினம் மற்றும் நடிகர் அருள்நிதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த ஆறாது சினம் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். கடைசியாக நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவான குற்றம் 23 திரைப்படத்தை இயக்கிய அறிவழகன் மீண்டும் இரண்டாவது முறையாக அருண் விஜய் உடன் இணைந்திருக்கும் திரைப்படம் பார்டர்.

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரிப்பில் உருவாகியிருக்கும் பார்டர் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்க ராஜசேகர்.B ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் பார்டர் திரைப்படத்தில் ஸ்டெஃபி படேல் கதாநாயகிகயாக நடிக்க நடிகை ரெஜினா கெஸன்ட்ரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்

11:11  புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் DR.பிரபு திலக் வழங்கும் பார்டர் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பார்டர் என்னும் தலைப்பிற்கு ஏற்ப அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவாகியிருக்கும்  இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிரடியான இந்த டிரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

தொடர்ந்து பார்டர் திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் யானை திரைப்படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.