“சட்டமன்றத்தில் யாருமே எதிர்த்துப் பேசாமல் இருப்பதால் போரடிக்கிறது” என்று, பொதுக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசியது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்வு, திமுக இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “சட்டமன்றத்தில் நாங்கள் எல்லாம் போய் உட்கார்ந்து இருக்கிறோம். எங்களால் ரொம்ப நேரம் 
உட்கார முடியவில்லை, எங்களுக்கு போரடிக்குது” என்று எடுத்ததுமே பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.

உதயநிதியின் பேச்சைக் கேட்டு திமுக தொண்டர்கள் எல்லாம் சிரிக்க, திமுகவின் மூத்த நிர்வாகிகள் சற்று அதிர்ச்சியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகப் பேசிய உதயநிதி, “நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், சட்டத்தில் யாருமே எதிர்த்துப் பேச மாட்டேன் என்கிறார்கள், அதனால் எனக்கு போரடிக்கிறது” என்ற காரணத்தையும், அவர் விளக்கமாக கூறினார். இதனைக் கேட்ட திமுக மூத்த நிர்வாகிகள் அதன் பிறகே சிரித்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக பேசிய உதயநிதி, “அதிமுகவின் எஸ். பி. வேலுமணி, எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் எல்லாரும் நம்மைப் பாராட்டிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“அந்த அளவிற்கு நமது அரசினுடைய செயல்பாடுகள் இருக்கின்றன” என்றும், அவர் பெருமையோடு குறிப்பிட்டார். 

அத்துடன், “இதே போல், நமது முதலமைச்சர் ஆட்சி செய்து கொண்டிருந்தால், அடுத்த 5 வருடங்களுக்கு நாம் யாரும் ஓட்டு கேட்கவே தேவையில்லை என்றும், 
அடுத்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நமக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுப்பார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்” என்றும், உதயநிதி பேசினார்.

அதாவது, தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் திமுக அரசால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. 

மேலும், வரும் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தான், உதயநிதி ஸ்டாலின் தனது சட்டமன்ற அனுபவங்களைப் பேசினார். தற்போது உதயநிதியின் இந்த அனுபவ பேச்சு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இதனிடையே, சற்று முன்னதாக 'வானவில் பண்பாட்டு மையம்' சார்பில் 'பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள்' சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெறுகிறது. 

இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல ஆயிரம் சிந்தனைகளைக் கொண்டவர் பாரதி என்றும், பாரதியின் கவிதை, பாடல்களை மக்களின் மனதிலிருந்து நீக்க முடியாது, பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை” என்றும் பாராட்டிப் பேசினார்.

மேலும், “ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும் என்றும், இது எனது அரசு அல்ல நமது அரசு” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

குறிப்பாக, “பாரதியார் இன்றும் தேவைப்படுகிறார், பாரதி காலத்தின் தேவை” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டிப் பேசினார்.