தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக உயர்ந்துவிட்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம். மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஐஸ்வர்யா ராஜேஷ்  பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா திரைப்படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ரிலீசானது.

இதனை அடுத்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனுக்கு கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து மற்றொரு சூப்பர் ஹிட் மலையாள திரைப்படமான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ரீமேக்காக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள துருவ நட்சத்திரம் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் மோகன்தாஸ் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ள நிலையில் தனது புதிய திரைப்படத்தை தொடங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

GS ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்குகிறார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் இத்திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக் பாஸ் அபிராமி வெங்கடாச்சலம், பிராங்க்ஸ்டர் ராகுல், பிரவீன் ராஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, பாரத் ஆசீவகன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய திரைப்படம் பூஜையோடு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ…