தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சாய் தரம் தேஜ், தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரியின் மகனாவார். இயக்குனர் தேவா கட்டா இயக்கத்தில் தயாராகி வரும் ரிபப்ளிக் என்னும் திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் நடிகர் சாய் தரம் தேஜ் கடந்த 10-ஆம் தேதி மாலை ஹைதராபாத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்.

தனது உயர் ரக ஸ்போர்ட்ஸ் பைக்கில் அதிவேகமாக பயணம் செய்த நடிகர் சாய் தரம் தேஜின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த நடிகர் சாய் தரம் தேஜ் மிகவும் மோசமான நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நடிகர் சிரஞ்சீவி & ராம்சரண் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து சென்றனர். மேலும் நடிகர் சாய் தரம் தேஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை குறித்த முக்கிய தகவலை மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாய் தரம் தேஜின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கழுத்து மற்றும் தோள்பட்டைக்கு இடையிலான எலும்பு முறிவு பலதுறை சார்ந்த மருத்துவர்களின் உதவியோடு சரிசெய்யப்பட்டது, தொடர்ந்து நடிகர் சாய் தரம் தேஜ் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.