தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வருகிறது அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கும் கழுவேத்தி மூர்க்கன். முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஜனவரி மாதத்தில் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படத்தை வெளியீட்டு வெற்றிகரமாக புதிய ஆண்டை துவக்கி இருக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியானது. தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற விடுதலை மற்றும் சமீபத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வந்து வசூல் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தையும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இந்த ஆண்டில் (2023) குறிப்பிடப்படும் படைப்பாக வெளிவந்த படம் தான் டாடா.
டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பியா மூவிஸ் மற்றும் டாடா படத்தை வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். வழக்கமாக தனது பாணியில் வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு டி-ப்ளாக், தேஜாவு மற்றும் டைரி என மூன்று திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சைக்கலாஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அருள்நிதி மற்றும் பாரதிராஜா இணைந்து நடித்த திருவின் குரல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களை கவனிக்க வைத்தது. அடுத்ததாக தன் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்த டிமான்டி காலனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் இணைந்துள்ள நடிகர் அருள்நிதி டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார்.
இந்த வரிசையில் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் தரமான சமூக அக்கறை கொண்ட படமாக தயாராகி இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஜோதிகாவின் ராட்சசி படத்தை இயக்கிய இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் மிரட்டலான கதாப்பாத்திரத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, சார்பட்டா பரம்பரை & நட்சத்திரம் நகர்கிறது படங்களின் நாயகி துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், ராஜசிம்மன் ஆகியோர் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திற்கு D.இமான் இசையமைக்க, பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். தயாரிப்பாளர் S.அம்பேத்குமார் தனது ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிக்கும் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற மே 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் தற்போது வெளியானது. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அதிரடியான அந்த ஸ்னீக் பீக் இதோ…