தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அருள்நிதி, தனக்கே உரித்தான பாணியில் பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக க்ரைம் த்ரில்லர், ஹாரர் த்ரில்லர், அக்ஷன் த்ரில்லர், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் முன்னதாக இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டைரி படத்தில் நடித்துள்ள அருள்நிதி, தொடர்ந்து யூட்யூபில் எரும சாணி யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த விஜயகுமார் இயக்குனராக அறிமுகமாகும் D-பிளாக் எனும் த்ரில்லர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதனிடையே மற்றொரு த்ரில்லர் திரைப்படமாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் தேஜாவு. இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகும் தேஜாவு படத்தில் அருள்நிதி உடன் இணைந்து மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், அச்சுத் விஜய், சேத்தன், மைம் கோபி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒயிட் கார்பட் பிலிம்ஸ் மற்றும் பி.ஜி.மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ள தேஜாவு படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அருள்நிதியின் தேஜாவு படத்தின் டீசர் வருகிற ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.