தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில், கடந்த ஆண்டின் வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சிலம்பரசன்.TR நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன்.TR நடித்து வருகிறார். இதனையடுத்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் கொரோனா குமார் படத்திலும் சிலம்பரசன்.TR நடிக்கவுள்ளார்.

இதனிடையே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்துவரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. 3-வது முறையாக கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான்-சிலம்பரசன்.TR கூட்டணி இணைந்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த வரிசையில் நடிகர் சிலம்பரசன்.TR & ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது. ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் தயாரித்துள்ள மஹா திரைப்படத்தை U.R.ஜமீல் எழுதி இயக்கியுள்ளார். நடிகை ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான மஹா படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

R.மதி ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையமைத்துள்ள மஹா படத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் மஹா திரைப்படத்தின் தமிழக திரையரங்க ரிலீஸ் உரிமத்தை ஆன் ஸ்கை மீடியா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.