கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என அவரே மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு அவரின் நிலைமை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். கவலைக்கிடமாக இருந்த அவருக்காக இசை ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் பிரார்த்தனை செய்தார்கள்.

அதற்கு பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாக மருத்துவமனை தெரிவித்தது. அவரது நுரையீரல் செயல்பாடும் படிப்படியாக முன்னேறி வருகிறது என மகன் சரண் கூறினார். ஆனால் நேற்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி எஸ்பி பாலசுப்பிரமணியம் உயிர் இழந்தார். அவரின் மறைவால் திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சமூக வலை தளங்களில் பலரும் எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றியும் பலரும் உருக்கமாக பேசி வருகிறார்கள்.

74 வயதாகும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜூன் 4, 1946ல் பிறந்தார். 1966ம் ஆண்டு சினிமாவுக்காக பாடும் பயணத்தை துவங்கினார் எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார்.

இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு அவர் ராசியான பாடகராகவும் இருந்திருக்கிறார். தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகம் என்றே கூறலாம். 

இந்நிலையில் எஸ்.பி.பி-ன் மறைவு குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார். பேரழிவு.... RIP SPB என்று குறிப்பிட்டு, பாடகர் எஸ்.பி.பி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பி இசை விரும்பிகளின் உயிர் பந்தம் என்றே கூறலாம். இறைவனுக்கு தாலாட்டு பாட சென்றுள்ளார் நம் SPB. நம்மை விட்டு அவரது உடல் பிரிந்தாலும், அவரின் குரல் மூலம் நம்முடன் என்றும் இருப்பார் SPB. எஸ்.பி.பி குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறது நம் கலாட்டா.