பப்ஜி விளையாட்டில் உயிர் காத்த இளைஞனுடன் மலர்ந்த காதலால், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி திரூவாரூர் வந்து தன் காதலனை திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது முடக்கம் பிறப்பக்கப்படடது. இதனால் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில், அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.

அந்த நேரத்தில் தான், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், திரூவாரூர் மாவட்ட இளைஞருக்கும் இடையே பப்ஜி விளையாட்டில் பூத்து மலர்ந்திருக்கிறது இந்த ஆன்லைன காதல்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அடுத்து உள்ள செறுகோல் ஆசாரிபொற்றவிளை பகுதியைச் சேர்ந்த மர வியாபாரி சசி குமாரின் இளைய மகள் 20 வயதான பபிஷா, அங்குள்ள திருவிதாங்கோடு பகுதியிலுள்ள செயல்பட்டு வரும் தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஆனால், படிப்பை காட்டிலும் ஆன்லைன் விளையாட்டில் அதிக ஆர்வம் அந்த பெண்ணுக்கு இருந்து உள்ளது.

அந்த நேரம் பார்த்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது முடக்கம் பிறப்பாக்கப்பட்டதால், வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்பந்தம் அந்த பெண்ணுக்கு ஏற்பட்டது. இதனால், ஆன் லைன் விளையாட்டான பப்ஜி விளையாட்டில் எந்நேரமும் 20 வயதான பபிஷா, மூழ்கியே கிடந்து உள்ளார்.

குறிப்பாக, பப்ஜி விளையாட்டின் போது வெற்றியை நோக்கி தன்னை பத்திரமாக அழைத்துச்சென்ற தோடு, தன்னை கொல்லாமல் காத்து வழிகாட்டியாகத் திகழ்ந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான அஜின் பிரின்ஸ் உடன், அந்த இளம் பெண் பபிஷாவிற்கு காதல் மலர்ந்து உள்ளது. இதனையடுத்து, அவர்கள் ஒருவரை ஒருவர் தங்களது செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு, தங்களது மனங்களையும் பகிர்ந்துகொண்டனர். அப்போது, அவர்களுக்குள் காதல் பூ பூத்துக் குலுங்கியிருக்கிறது. இதனையடுத்து, காதலர்கள் இருவரும் பப்ஜி விளையாட்டை ஓரம் கட்டிவிட்டு, இருவரும் செல்போனிலேயே காதல் விளையாட்டை விளையாடத் தொடங்கினர்.

இதில், இளம் பெண் பபிஷாவிற்கு, இந்த 20 வயதிலேயே காதல் முற்றிப்போய் உள்ளது. காதலன் இல்லாமல் அந்த பெண்ணால் இருக்க முடியவில்லை. தற்போது ஊரடங்கு காரணமாகப் பேருந்து உள்ளிட்ட எந்த வாகன போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருந்ததால், வேறு வழியின்றி தன் வீட்டிலேயே அந்த பெண் முடங்கிப் போய் இருந்து உள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று சற்று விலகி, மெல்ல இயல்பு நிலைகள் திரும்பிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில், தமிழக அரசு பேருந்து சேவை உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனால், பேருந்து வசதிகள் பழைய இயல்பு நிலைக்கே திரும்பியது. இதனையடுத்து, இது தான் காதலைத் திருமணம் செய்யச் சரியான தருணம் என்று முடிவு செய்த அந்த பெண், தன் காதலனிடம் முன்கூட்டியே திட்டமிட்டு எல்லா விசயங்களையும் செல்போனிலேயே பேசி விட்டு, கடந்த 19 ஆம் தேதி பபிஷா திடீரென வீட்டிலிருந்து மாயமானார்.

ஆனால், மகளை காணவில்லை என்று, அவரது பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து, அங்குள்ள திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான பவிஷாவைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து காதலனைத் தேடி திரூவாரூர் வந்த பபிஷா, அங்குள்ள ஒரு கோயிலில் மாலையை மாற்றி, காதலன் அஜின் பிரின்ஸை திருமணம் செய்து கொண்டு, மாலையும் கழுத்துமாக திருவட்டார் காவல் நிலையத்திற்கு வந்து, தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று, கூறி உள்ளார்.

மேலும், “எங்கள் காதலுக்கு என் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறியதோடு, பாதுகாப்பு தரவேண்டும்” என்றும், பபிஷா, கோரிக்கை விடுத்தார் 

இதனையடுத்து, திருமணம் செய்துகொண்ட இருவரும் மேஜர் என்பதால், போலீசார் இரு குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு வரவைத்து, இரு தரப்பிடமும் விசயத்தை எடுத்துக்கூறி சமரசம் பேசினர். இதனையடுத்து, போலீசாரே அந்த காதல் ஜோடியை சேர்த்து வைத்து, இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்றுத் தந்தனர். அதன் தொடர்ச்சியாக, காதலர்கள் இருவரும், அருகிலுள்ள ஆலயத்தில் மீண்டும் மாலை மாற்றி, திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு, காதலன் அஜின் பிரின்ஸ், தன் காதல் மனைவி பபிஷாவை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான திருவாரூருக்குப் புறப்பட்டுச்சென்றார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.