ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இனி அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றும், தோனி மீதான சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்கப்படும் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன. 

2020 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்து வருகிறது. 

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன்பே சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா அதிரடியாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, ஹர்பஜன் சிங்கும் அணியில் இருந்து வெளியேறினார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இருக்கிற வீரர்களை வைத்து தோனி தலைமையிலான சென்னை அணி மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் களம் இறங்கி வெற்றியை ருசித்தது. ஆனால், 2 வது போட்டியான ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அம்பதி ராயுடு காயம் காரணமாக விளையாடவில்லை. 

இந்த போட்டியில் சென்னை அணி மிஞ்சி இருக்கும் வீரர்களை வைத்து விளையாடியதில் தோல்வியைத் தழுவியது. 

இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்தது. அதன் பின் விளையாடி சென்னை அணி 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சென்னைக்கு வெற்றி வாய்ப்புகள் இருந்தும் கூட, சென்னை அணி செய்த சில தவறுகளால் மற்றும் சொதப்பல்களால், தோல்வியை தழுவியது. 

இந்த தோல்வி தான், தோனியின் கேப்டன் ஷிப் பற்றிய புதிய புதிய விமர்சனங்களை எழுப்பி உள்ளது. தோனி இந்திய அணியை வழி நடத்திச் சென்ற போது ஏற்பட்ட சில தோல்விகளில் கூட சம்மந்தப்பட்ட வீரர்களை மட்டுமே பலரும் இதுவரை குறை சொல்லி வந்தனர். ஆனால், தோனியின் கேப்டன் ஷிப் பற்றி 

இதுவரை எந்த ஒரு விமர்சனமும் எழுந்தது இல்லை. ஆனால், இந்த ஐபிஎல் போட்டியில் தோனி, 7 வது இடத்தில் களமிறங்கியதும், ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் சிக்கர்களாகப் பறக்க விட்டுக் கொண்டு இருந்த போது, தோனி மீண்டும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கே ஓவர் அளித்து சொதப்பியதும், மிகப் பெரிய அளவில் சர்ச்சைகளை எழுப்பி உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், “தோனி கேப்டன்சியில் 2 தவறுகள் உள்ளதாகக் குறிப்பிட்டு, அவருக்கு 10 க்கு 4 மார்க் மட்டுமே போட்டு” தனக்கே உண்டான பாணியில் விமர்சனம் செய்திருந்தார்.

மேலும், “சென்னை அணியின் கேப்டன் தோனி, 7 ஆம் நிலையில் இறங்கியதும், அறிமுக வீரர் ருதுராஜ் கெய்க்வாடையும், சாம் கரணையும் தோனி, தனக்கு முன்னால் களமிறங்கச் செய்ததும் அர்த்தமே இல்லாத ஒரு விசயம் என்றும், தோனி போன்ற ஒரு ஹிட்டர் இறங்காமல் பின்னால் தள்ளிப்போட்டது தான் கேப்டனாக அணியை வழி நடத்துவதா?” என்றும், கவுதம் கம்பீர் விமர்சனம் செய்தார்.

அதேபோல், இங்கிலாந்து ஜாம்பவான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ள கருத்தில், “தோனியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது ஒரு முட்டாள்தனமான பதில்” என்றும், கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், சென்னை அணியின் தோல்வி மற்றும் கேப்டன் தோனி மீதான விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையிலும், சென்னை அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளை டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

அதன்படி, அம்பதி ராயுடுவிற்கு கையில் சின்ன காயம் மற்றும் முதுகு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அடுத்த போட்டியிலும் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

அம்பதி ராயுடு இடத்தில் யார் ஆடுவார் என்று கேள்வி தற்போது எழுந்து உள்ளது. அம்பதி ராயுடுவிற்கு மாற்றாகக் களம் இறக்கப்பட்ட ரூத்துராஜ் சரியாக விளையாடவில்லை என்பதால், அவர் அணியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து சந்தேகம் எழுந்து உள்ளது. அவருக்கு பதில் புதிய வீரர் களமிறங்கவும் வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அத்துடன், சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் வாட்சன், முதல் 2 போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதால் மிடில் வரிசை வீரர்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டது. மும்பை அணிக்கு எதிரான மோதலில் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் , பவர் பிளேயில் சென்னை அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, வரும் போட்டிகளில் இளம் வீரரான சாம் கரணை தொடக்க வீரராக களமிறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லுங்கி நிகிடி வீசிய இறுதி ஓவரில் 30 ரன்கள் உட்பட 4 ஓவர்களில் 56 ரன்கள் வாரி வழங்கினார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதை அறிந்த போதிலும், நிகிடி யாகர்கள் வீசவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாஷ் ஹேஸில்வுட் களமிறக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இனி வரும் போட்டிகளில் சென்னை அணி தூள் கிளப்பும் என்றே எதிர்பார்க்கலாம்...