கடந்த மாதம், அதாவது 5ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அவருக்கு தீவிரமனது என்று செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து, தான் நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வீடியோ வாயிலாக தெரிவித்திருந்தார் எஸ்.பி.பி.

ஆனால் நாளடைவில் வயது முதிர்வினால் அவருக்கு கொரோனா நிஜமாகவே தீவிரமடையத் தொடங்கிவிட்டது. ஏறத்தாழ ஒரு வாரத்துக்குப் பிறகு, அவர் மிக தீவிரமான நிலையில் இருப்பதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனையே தெரிவித்தது. அதன்படி ஆகஸ்ட் 13ம் தேதி நள்ளிரவு நேரத்தில் அவரின் உடல்நிலை மோசமாகிவிட்டதாக மருத்துவமனை தரப்பு கூறியிருந்தது. 

அதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திரையுலகினர் உட்பட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரையுலகில் உச்ச நடிகர் ரஜினி முதல் இசையலமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் என பலரும் எஸ்.பி.பி குணமடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரார்த்தனை செய்தனர். தினமும் மாலை இதுதொடர்பாக தன் தந்தையின் அன்றைய ஹெல்த் அப்டேட்டை வெளியிட தொடங்கினார் எஸ்.பி. சரண்.
 
அந்தவகையில் எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று குறித்த ஆய்வில் நெகடிவ் என வந்துள்ளது என்று எஸ்.பி.பி. சரண் கூறினார். கொரோனா தொற்று நெகடிவ் என்றான நிலையிலும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக, எஸ்.பி.பி. யின் உடல் சிகிச்சைக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பதாகவும், விரைவில் வீடு திரும்ப வேண்டுமென அவர் விரும்புவதாகவும் கூறி வந்தார். 

ஆனால் யாரும் எதிர்ப்பாராத விதமாக, எஸ்.பி.பி.யின் உடல் மீண்டும் மோசமடையத்தொடங்கியது. கொரோனாவிலிருந்து குணமடைந்திருந்த அவருக்கு, நுரையீரல் சிக்கல்கள் எழத்தொடங்கின. தீவிரமான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், இன்றைய தினம் (செப்டம்பர் 25), வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. 

எஸ்.பி.பி மறைவு குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஆகஸ்ட் 5-ஆம் தேதி எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்குக் கடுமையான கோவிட்-19 காரணமாக வந்த நிமோனியாவால் ஆகஸ்ட் 14 முதல் உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் எங்கள் மருத்துவர் குழு அவரைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வந்தது. செப்டம்பர் 4 அன்று அவருக்குக் கரோனா தொற்று நீங்கிவிட்டது என்பது தெரியவந்தது.

இன்று காலை ஏற்பட்ட பின்னடைவினால், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளின் உதவிகளும், மருத்துவக் குழுவின் சிறந்த முயற்சிகளையும் தாண்டி, அவரது நிலை இன்னும் கவலைக்கிடமானது. அவரது இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்தது.

செப்டம்பர் 25, மதியம் 1:04 மணியளவில் அவர் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அவரது குடும்பம், நண்பர்கள், நல விரும்பிகள் மற்றும் ரசிகர்களின் இழப்புக்கு, இந்த துக்க நேரத்தில் மனமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக, கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ``வெகுசில பெரும் கலைஞர்களுக்கே தான் வாழும் காலத்திலேயே அவர் திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப்பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பி.. நாடு தழுவிய புகழ் மழையில் நனைத்தபடியே அவரை வழி அனுப்பி வைத்த அவரின் அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களின் ஒருவனான என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அவர், நனைந்த மழையில் என்னையும் நனைய அனுமதித்ததற்கு நன்றி. அவரின் குரலின் நிழல்பதிப்பாக பலகாலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேரு. பலமொழிகளில் நான்கு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர், ஏழு தலைமுறைக்கு அவர் புகழ் வாழும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் உடனான தனது கலைப்பயணத்தையும் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், எஸ்.பி.பி.யின் மறைவுக்கு தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,

``இசை நாயகன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவையடுத்து, இந்திய இசையுலகம் ஒரு மெல்லிய குரலை இழந்துள்ளது. அவரது எண்ணற்ற ரசிகர்களால் பாடும் நிலா’ அல்லது ‘சிங்கிங் மூன்’ என்று அழைக்கப்படும் எஸ்.பி.பி. பத்ம பூஷண் உள்ளிட்ட பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள செய்தியில், ``எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இசையுலகில் ஒரு வெற்றிடத்தை விட்டு சென்றுள்ளார். அதனை நிரப்புவது மிகவும் கடினம். அவரது மென்மையான குரல், மொழி மற்றும் இலக்கியம் மீதான அன்பு ஆகியவை என்னை உட்பட லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இருவரும் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் . ஓம் சாந்தி" என்று கூறப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``எதிர்பாராத விதமாக பின்னணி பாடகர் எஸ்.பி.பி., மறைவு மூலம் நமது கலாசார உலகம் ஏழையாகிவிட்டது. அனைவரின் வீடுகளிலும் ஒலித்த குரல், மென்மையான குரல் மற்றும் இசையால், பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்தது. இந்த சோகமான நேரத்தில், அவரின் குடும்பம் மற்றும் ரசிகர்களின் நினைவாக எனது எண்ணம் உள்ளது. ஓம்சாந்தி" என்ரு கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ``பிரபல இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் பத்ம பூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மென்மையான குரல் மூலம் அவர் எப்போதும் நமது நினைவில் இருப்பார். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஓம்சாந்தி" என்று கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்தியில்,``எஸ்பிபி இழப்பு ஈடு செய்ய முடியாதது. இசை மூலம் எப்போதும் நினைவில் நிலைத்திருப்பார். மந்திரக்குரலை அனைவரும் இழந்துவிட்டோம்" என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தியில், ``ஐந்து தலைமுறைகள் தாண்டி, அரைநூற்றாண்டிற்கும் மேலாக கோடிக்கணக்கான நெஞ்சங்களை தனது காந்தக் குரலால் கட்டிபோட்ட பன்முக ஆளுமை திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு திரைத்துறைக்கும், இசையுலகிற்கும் ஈடில்லா பேரிழப்பு! ஐந்து தலைமுறைகள் தாண்டி, அரைநூற்றாண்டிற்கும் மேலாக கோடிக்கணக்கான நெஞ்சங்களை தனது காந்தக் குரலால் கட்டிபோட்ட பன்முக ஆளுமை திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு திரைத்துறைக்கும், இசையுலகிற்கும் ஈடில்லா பேரிழப்பு! பாடும் நிலா திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை இழந்து மிகுந்த துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வெளியிட்டுள்ள செய்தியில், ``திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. #SPBalasubramaniam அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்" என்று சொல்லியிருக்கிறார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ``பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலம் அவரை பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல்" என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இப்போதைய எம்.பி.,யுமான ராகுல் காந்தி குறிப்பிடுகையில், ``எஸ்.பி. பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது பாடல், பல மொழிகளில் லட்சகணக்கானோரின் இதயங்களை தொட்டுள்ளது. அவரது குரல் என்றும் நிலைத்திருக்கும்" எனக்கூறப்பட்டுள்ளது. 

சங்கீத மேகத்தில் கலந்த நம் பாடும் நிலாவுக்கு, எங்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கல்கள்.