தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அல்லு அர்ஜுனனின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த புஷ்பா - The Rise திரைப்படம் கடந்த ஆண்டு(2022) டிசம்பர் மாதம் வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட புஷ்பா திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெளியான அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் வேட்டையாடியது.

இதனையடுத்து புஷ்பா 2 - The Rule திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. அதிரடியான புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, மிரட்டலான SP பன்வார் சிங் செகாவத் கதாபாத்திரத்தில் நடிகர் ஃபாதர் பாசில் நடிக்கிறார். முதல் பாகத்தின் முடிவில் புஷ்பா - SP பன்வார் கதாபாத்திரங்கள் இடையே தொடங்கும் மோதல் தீப்பொறியாக கிளம்பிய நிலையில் இரண்டாவது பாகத்தில் எரிமலையாய் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் சுகுமார் இயக்கும் புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம்  தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மைத்ரி மூவி மேக்கர் தயாரிப்பில் உருவாகும் புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முன்னதாக டிசம்பர் மாதம் அவதார் 2 திரைப்படத்தின் ரிலீஸாடு சேர்த்து புஷ்பா 2 டீசரை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இதனிடையே புஷ்பா 2 திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வருகிற டிசம்பர் முதல் வாரம் முதல் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடத்த பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மூன்று வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறும் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் புஷ்பா 2 படத்தின் அனைத்து பணிகளும் மிக சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக எந்த அவசரமும் இன்றி மிகுந்த சிரத்தையோடு அதற்கான நேரத்தை எடுத்துக்கொண்டு இயக்குனர் சுகுமார் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் வருகிற 2024 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.