தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்த வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதனையடுத்து சினிமா வீரன் எனும் டாக்குமென்டரி திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வெளியிட்டார்.

இந்த வரிசையில் ஒரு இடைவெளிக்கு பிறகு  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இயக்கத்தில் வெளியாகும் முஸாஃபிர் எனும் புதிய மியூசிக் வீடியோவை அறிவித்தார். அன்கித் திவாரி இசையில் உருவாகியிருக்கும் முஸாஃபிர் பாடலை தமிழில் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். மேலும் மலையாளத்தில் பாடகர் ரஞ்சித்தும் தெலுங்கில் பாடகர் சாகரும் பாடியுள்ளனர்.

முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில வாரங்களுக்கு முன்பு மீண்டு வந்து மீண்டும் இயக்குனராக தனது பணியை தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப கலாட்டா குழுமம் வேண்டிக் கொள்கிறது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் பாடலை பே ஃபிலிம்ஸ் LLP நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் ஷிவின் நரங் நடித்துள்ள முஸாஃபிர் மியூசிக் வீடியோவிற்கு விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய முன்னணி நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் நடித்து நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழில் பாடலாசிரியர் விவேகாவின் வரிகளில் பயணி என்ற பெயரில் ரிலீசாகும் முஸாஃபிர் பாடலின் புதிய ப்ரோமோ தற்போது வெளியானது.  அந்த ப்ரோமோ இதோ…