தமிழில் நீ தானா அவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம், அட்டக்கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மிகப் பிரபலம் அடைந்தார் 

தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து சிறந்த நடிகையாக அங்கீகரிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தொடர்ந்து சீனு ராமசாமியின் தர்மதுரை, மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம், வெற்றிமாறனின் வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். மேலும் கனா, க/பெ. ரணசிங்கம் என கதாநாயகிகளை முன்னிறுத்தும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் மோகன்தாஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் முரளி கார்த்திக் எழுதி இயக்கும் மோகன்தாஸ் திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

பரபரப்பாக நடைபெற்று வரும் மோகன்தாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் தன்பகுதி காட்சிகளை நிறைவு செய்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இன்று நடைபெற்ற படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் பகுதி காட்சிகளை நிறைவு செய்து  கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அடுத்ததாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் உடன் இணைந்து துருவநட்சத்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.  மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்து சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.