இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கைதி திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ். முன்னதாக தமிழ் சினிமாவில் பெருமான் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அர்ஜுன் தாஸ் தொடர்ந்து ரேண்டம் நம்பர் என்ற குறும் படத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து இயக்குனர் அட்லியின் தயாரிப்பில் உருவான அந்தகாரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் அந்தகாரம் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் வழக்கம்போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். 

அடுத்ததாக கும்கி 2 மற்றும் இயக்குனர் வசந்தபாலன் பெயரிடப்படாத புதிய திரைப்படம் என அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் நடிகர் அர்ஜுன் தாஸ் புதிய தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். பிரபல இளம் தெலுங்கு நடிகரான சித்து ஜொன்னலகட்டா உடன் இணைந்து அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய தெலுங்கு படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 

பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டைன்மென்ட் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இத்திரைப்படத்தை சௌரி சந்திரசேகர் டி ரமேஷ் இயக்குகிறார். இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தி இசையமைக்கவுள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான கப்பெல்லா திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனரான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார். விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.