தர்பார் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 

படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. 

இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

தற்போது படத்தில் நடிகர் அர்ஜெய் இணைந்துள்ளார் என்ற ருசிகர தகவல் தெரியவந்துள்ளது. இச்செய்தியை உறுதி படுத்தும் விதத்தில், அர்ஜெய் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று செய்துள்ளார். ருத்திராட்சம் அணிந்த பெரும்பாலானோரின் ஈர்ப்பு தலைவர் ரஜினிகாந்த். அப்படிபட்ட மனிதரை நான் சினிமாவிற்காக சென்னையில் காலடிவைத்த நாள் முதல் பார்க்க முடியாத தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துள்ளேன். அந்த மாமனிதரை பார்த்து, தொட்டு ரசிக்க பழனி முருகன் அருளால் கிடைத்த வாய்ப்பு அண்ணாத்த என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

2014-ம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் திரைப்படம் மூலம் திரையுலகில் கால்பதித்தவர் அர்ஜெய், இவரது எதார்த்தமான நடிப்பால் பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்தார். அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான தெறி படத்தில் தனது வில்லத்தன நடிப்பால் ஈர்த்திருப்பார். அதன் பின் எமன், பண்டிகை, சண்டக்கோழி 2, வெல்வெட் நகரம் போன்ற படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாத்த படத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா. 

சில நாட்கள் முன்பு, போயஸ் கார்டன் வீட்டிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தப்படி லம்போர்கினி காரை ஓட்டிச் சென்றார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. என்னவென்று பார்த்தால், கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் மகள், மருமகன் மற்றும் பேரனுடன் ஓய்வெடுத்து வருகிறார் சூப்பர்ஸ்டார். ரஜினிகாந்த் தனது வீட்டின் பண்ணை தோட்டத்தில் வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்றும் நேற்று வைரலானது.