தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, உதயா, சமுத்திரம், அலைபாயுதே உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவரும், உதயா, பிஸ்தா, ரிதம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவருமான பிரபல தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைத்துக் கொண்டார்.

தொடர்ந்து இதுபற்றி பிரமிட் நடராஜன், ``பாஜகவில் இணைந்ததில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போது தர்மம் கடவுள் ரூபத்தில் தலைகாக்கும். அப்படி இப்போது கடவுள் மோடி ரூபத்தில் பூமிக்கு அதர்மத்தை அழிக்க வந்திருக்கிறது.

எனக்கு இருக்கின்ற நல்ல பெயர் , தொடர்புகளை பாஜகவிற்காக பயன்படுத்துவேன். ராமராக இருக்கக்கூடிய பிரதமர் மோடிக்கு ஒரு அணிலாக என்னால் இயன்ற பணியைச் செய்வேன்" எனப் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் இன்னும் ஒன்பது, பத்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் காய்களை நகர்த்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் கடந்த சில மாதங்களாகவே தேர்தலுக்கான பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு திரை பிரபலங்களைத் தனது கட்சியில் இணைத்து வருகிறது.

இதன்பிறகு பேசிய பாஜக தலைவர் எல்.முருகன் பேசுகையில், ``கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு, ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பு? நடிகர்களில் ரஜினி சரத்குமாரைத் தவிர மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர்தான், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, பலர் பாஜகவில் இணைந்தார்கள். அப்படி எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் கீதா, முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். மேலும் திமுக, அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த  நடிகர் ராதா ரவிக்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினிகாந்த்தின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா மற்றும் இசையமைப்பாளர், கங்கை அமரன் ஆகியோரும் தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யா பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே.சுரேஷ் மாநில OBC அணிக்கு மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இயக்குநர் பேரரசு, பெப்சி சிவா, தீனா ஆகியோர் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு மாநிலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தார். அரசு தொடர்பு பிரிவுக்கு ஓய்வு பெற்ற சந்திரலேகா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார்.

நடிகர் ராதாரவி, மதுவந்தி,கெளதமி, விஜயகுமார், குட்டி பத்மினி, நமீதா, ஜெயலட்சுமி ஆகியோருக்கு மாநில செயற்குழு உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கஸ்தூரி ராஜா, கங்கை அமரன் இருவருக்கும் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர்கள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.  கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளர்களாக பெப்சி சிவா, தீனா,பேரரசு, பாபு கணேஷ், அழகன் தமிழ்மணி நியமிக்கப்பட்டுள்ளனர். 

இப்படி தொடர்ச்சியாகப் பலருக்கும் பாஜகவில் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று இவரும் கட்சியில் சேர்ந்திருப்பது, பாஜகவின் பலமாக மாறியுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- பெ.மதலை ஆரோன்