தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.2006-ல் ஞானவேல் ராஜாவால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சூர்யா மற்றும் கார்த்தியின் பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துள்ளது.இவர்களை தவிர பல டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்து,விநியோகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சூர்யா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகவிருந்த அருவா படத்தை தயாரிக்கவிருந்தனர்.ராஷி கண்ணா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருந்தார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவிருந்தார்.இந்த படத்தை 2020 தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்,ஆனால் கொரோனா காரணமாக பட ஷூட்டிங்கின் துவக்கத்திற்கே பெரிதும் தாமதமாகியுள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பண மோசடி வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிதி நிறுவனம் தொடங்குவதாக துளசி மணிகண்டன் என்பவரை ஏமாற்றி ரூ.300 கோடி மோசடி செய்ததாக நீதிமனி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது இராமநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் பிரபல சினிமா தயாரிப்ப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.ஜூலை 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஞானவேல் ராஜாவுக்கு இராமநாதபுரம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவின் தாக்கம் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் அல்லது வீடியோ கான்ப்ரென்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என ஞானவேல்ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த மோசடியில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் முதல் தகவல் அறிக்கையில் கூட தன்னுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் ,ரூ. 3 கோடி ரூபாய் மோசடியை காவல்துறையினர் ரூ.300 கோடி என தவறாக குறிப்பிடுவதாகவும் ஞானவேல் ராஜா தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.இதற்கு காவல்துறை தரப்பு, நீதிமனி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே ஞானவேல்ராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ஞானவேல்ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த மோசடி வழக்கு விசாரணையில் தெளிவு கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆகஸ்ட் 7ஆம் தேதி இராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஞானவேல் ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என்று  உத்தரவிட்ட நீதிபதி, ஆகஸ்ட் 7ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக தவறினால், ஞானவேல்ராஜா மீது காவல்துறையினர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.