இந்திய திரை உலகின் இசை ஜாம்பவானாக விளங்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த 2022ஆம் ஆண்டில் ரசிகர்களுக்கு பெரிய விருந்து வைக்க காத்திருக்கிறார். தமிழில் சீயான் விக்ரமின் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான், சிலம்பரசன் TR-ன் பத்து தல, பார்த்திபனின் இரவின் நிழல், கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் இசையில் தயாராகியுள்ளன.

குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான இசையமைத்துள்ள  இசைப்புயலின் இசையில் மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையன் குஞ்சு, ப்ரித்வி ராஜின் ஆடுஜீவிதம் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்டில் மெய்டான், ஹீரோபன்டி, பிப்பா ஆகிய படங்களும் தயாராகி வருகின்றன.

திரைப்படங்கள் மட்டுமல்லாது தனது மாஜா நிறுவனம் சார்பில் பல சுயாதீன இசை கலைஞர்களை மேடையில்  அரங்கேற்றம் செய்து வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த “என்ஜாய் என்ஜாமி” பாடலை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் “மூப்பில்லா தமிழே தாயே” பாடல் அடுத்து வெளிவர உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் கவிஞர் தாமரை எழுதியுள்ள “மூப்பில்லா தமிழே தாயே” பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், கதிஜா ரஹ்மான், சைந்தவி, அமீன ரபீக், பூவையார், கேப்ரியலா செல்லஸ் உள்ளிட்டோர் பாடி நடித்துள்ளனர், அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது “மூப்பில்லா தமிழே தாயே” பாடல் வீடியோ வெளியானது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த பாடல் வீடியோ இதோ…