தமிழ் திரையுலகில் மிக முக்கிய நடிகராக திகழும் நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் இரை வெப்சீரிஸ் aha தமிழ் தளத்தில் சமிபத்தில் ரிலீசானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இரை வெப்சீரிஸை உலகநாயகன் கமல்ஹாசனின் உதவி இயக்குனரும் தூங்கா வனம் மற்றும் கடாரம்கொண்டான் படங்களின் இயக்குனருமான ராஜேஷ்.எம்.செல்வா இயக்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கதாநாயகனாக, வில்லனாக, மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த சரத்குமார் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக நடித்த கடைசி படமாக சில தினங்களுக்கு முன் வெளியான ஜேம்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமாரின் 150வது படமாக தி ஸ்மைல் மேன் திரைப்படம் தயாராகி வருகிறது.இந்த வரிசையில் அடுத்ததாக சரத்குமார் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவர தயாராகி வருகிறது என்கவுன்ட்டர் @ 152 BLOCK திரைப்படம். 

இயக்குனர் S.T.வேந்தன் எழுதி இயக்கியுள்ள என்கவுன்ட்டர் படத்தை VR மூவிஸ் சார்பில் ராஜேஸ்வரி வேந்தன் தயாரித்துள்ளார். நடிகை இனியா கதாநாயகியாக நடிக்க, நிழல்கள் ரவி, பிளாக் பாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் என்கவுன்ட்டர் படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இந்நிலையில் சரத்குமாரின் என்கவுன்ட்டர் திரைப்படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…