பெண் மருத்துவரை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் உறவு கொண்டு ஏமாற்றிய ஆண் மருத்துவர், அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார். 

சென்னை வேளச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவரான இளம் பெண் ஒருவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி 
வந்தார். 

அப்போது, அதே மருத்துவமனையில் சென்னை காட்டாங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவரான 22 வயதான கார்த்திக் என்பவரும், அங்கு பணியாற்றி வந்தார்.

அப்போது, அந்த பெண் மருத்துவருக்கும், ஆண் மருத்துவரான கார்த்திக்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் காதலர்களாக வலம் வந்தனர். சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் இருவரம் காதலர்களாக ஊர் சுற்றி வந்தனர்.

அத்துடன், இரு மருத்துவர்களும் ஒருவரை ஒருவர் விரும்புவது அந்த மருத்துவமனையில் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த கதையாக மாறிப்போனது.

இப்படியாக, இவர்களது காதல் வாழ்க்கை தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், ஆண் மருத்துவரான கார்த்திக், அந்த பெண் மருத்துவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை ஆசையான வார்த்தைகளை அள்ளி வீசி, தனது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து வரவழைத்து, அவருடன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த பெண் இளம் மருத்துவர் கர்ப்பமடைந்தார். 

இதனையடுத்து, “நான் கர்ப்பமாக இருக்கிறேன்” என்று, அந்த பெண் மருத்துவர், காதலன் கார்த்திக்கிடம் கூறியுள்ளார். 

அப்போது, “நீ கர்ப்பத்தைக் கலைத்தால் தான், என்னை உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியும்” என்று, கூறியதாகத் தெரிகிறது.

காதலனின் பேச்சை நம்பிய அந்த பெண், மாத்திரை சாப்பிட்டு தனது கர்ப்பத்தைக் கலைத்து உள்ளார். ஆனால், அடுத்த சில நாட்களில் இருந்து காதலன் கார்த்திக், தனது காதலியான பெண் மருத்துவருடன் பேசாமல், முற்றிலும் தவிர்ந்து வந்திருக்கிறார்.

அத்துடன், அந்த பெண் மருத்துவருடனான காதலையும், அவர் முறித்துக்கொண்டு உள்ளார். அந்த பெண் மருத்துவரின் செல்போன் எண்ணையும் அவர் பிளாக் செய்து உள்ளார். 

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை நன்கு உணர்ந்த அந்த பெண் மருத்துவர், கடும் அதிர்ச்சியடைந்து, மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதனையடுத்து, அந்த பெண் மருத்துவர், தன்னை காதலித்து பாலியல் உறவுகொண்டு ஏமாற்றிய அந்த ஆண் மருத்துவர் மீது, கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கார்த்திக்கை அழைத்து விசாரித்து உள்ளனர். இந்த விசாரணையில், “பெண்ணை காதலிப்பது போல் நடித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியது” தெரிய வந்தது. 

இதனையடுத்து, இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து, ஆண் மருத்துவர் கார்த்திக், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் பெற்றோர் முன்னிலையில் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 

மேலும், திருமணம் முடிந்த கையோடு தன் மனைவியை, தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், பெண்ணின் பெற்றோர் வீட்டிலேயே அவரை கார்த்திக் விட்டுச் சென்று உள்ளார். 

குறிப்பாக, அந்த பெண் மருத்துவர் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில், “நான் திருமணம் செய்தது செல்லாது என்று, கணவன் கார்த்திக் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவர், மீண்டும் கார்த்திக் மீது அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கார்த்திக்கைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.