அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக வும், அணி சேர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக அரசியல் களம் அனல் பறந்துகொண்டு இருக்கிறது. தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வர உள்ளதை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதனால், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்படைந்து உள்ளன.

குறிப்பாக, “சசிகலாவின் அரசியல் பிரவேசம் இன்னும் சில நாட்களில் அசுரவேகம் எடுக்கும் என்றும், கழகம் புத்தெழுச்சி பெறும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும்”  நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அத்துடன், “தேர்தல் களம் புகுவோம் என்றும், எழுச்சியோடு களப்பணி ஆற்றுவோம்” என்றும், அந்தி செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், “புறப்படுங்கள் புறநானூற்றுப் படைகளே தேர்தல் களம் நோக்கி” என்று, நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, எதிரிகளின் நெஞ்சம் பதறும்படி சசிகலா விசுவரூபம் எடுப்பார். துரோகிகளுக்கு மீண்டும் ஓர் எச்சரிக்கை, இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை” என்றும், நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் கூறப்பட்டு உள்ளது. 

இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் அரசியல் பிரவேசம் உறுதியாகி உள்ளது.

அதே நேரத்தில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தங்கள் கூட்டணியில் இடம் பெறுவது குறித்து, பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்” என்றும், அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னை தியாகரா நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், “விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்றும், கட்சி நிர்வாகிகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்றும், எந்தெந்த இடங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை விரைவில் தொடங்கும்” என்று, 
குறிப்பிட்டார்.

“தமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது அப்போது தான் முடிவாகும்” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாஜக கூட்டணியில் இடம் பெறுமா என்பது குறித்து டெல்லி தலைமை தான் முடிவு செய்யும்” என்றும், எல்.முருகன் தெரிவித்தார்.

இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில், அமமுக வும் அணி சேர உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. 

பாஜக தமிழ் மாநிலத் தலைவர் எல்.முருகனின் இந்த பேட்டி, தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.