“சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவம் உங்களுக்கும் நடக்கும்” என்று போலீஸ் எங்களை மிரட்டுவதாக நாகர்கோவில் காசியின் சகோதரி கண்ணீர் மல்க குற்றம்சாட்டி உள்ளார். 

சென்னையில் பெண் டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், நாகர்கோவில் காசியை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, சி.பி.சி. ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து காசியை தற்போது விசாரித்து வருகின்றனர். அதன்படி, காசியால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மெம்மரி கார்ட், காசி பயன்படுத்திய செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை போலீசார் அதிரடியாகப் 
பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, காசியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து காசியின் நண்பன் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்தனர். அவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த பல்வேறு தகவலின் படி, காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்தது.

குறிப்பாக, காசியை மிஞ்சும் அளவுக்கு அவனது நண்பன் தினேஷ், பல பெண்களை ஏமாற்றியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்து, பணம் கேட்டு மிரட்டி வந்ததும் தெரியவந்தது. அத்துடன், பல பெண்களின் ஆபாசப் படம் அவனிடம் இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் காசியின் நண்பனும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருமான தினேஷை, அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விசாரணையில், “காசியின் வக்கிர புத்தி தெரிந்ததும் பல பெண்கள் அவரின் தொடர்பைத் துண்டித்து வந்துள்ளனர். இதனையடுத்து, தன்னிடமிருந்து விலகிச் செல்லும் பெண்களின் செல்போன் நம்பரை காசி, தன்னுடைய நண்பர் தினேசுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். பெண்களின் செல்போன் நம்பர் வந்ததும், 
அந்த பெண்களை தினேஷ் தொடர்பு கொண்டு பேசி மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அதன்படி, “காசியிடம் பேசவில்லை என்றால், உங்கள் சம்மந்தப்பட்ட ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக” மிரட்டி வந்திருக்கிறார். இந்த மிரட்டலுக்குப் பயந்து சில பெண்கள், காசியின் தொடர்பைத் துண்டிக்க முடியாமல், கடும் இன்னலுக்கு ஆளாகித் தவித்து வந்திருக்கிறார்கள். 

மேலும், காசியுடன் பழகி வந்த பல பெண்களை மிரட்டி, தினேஷ் தனியாக பாலியல் பலாத்காரம் செய்து, அவனும் தன் பங்கிற்கு ஆபாசப் படங்களை எடுத்து வைத்துக்கொண்டு, காசியைப் போலவே மிரட்டி வந்ததும்” விசாரணையில் தெரியவந்தது. இதில், “காசி தொடர்பாகப் புகார் அளிக்கத் துணிந்த ஒரு இளம் பெண்ணை, காசி மற்றும் அவனது கூட்டாளிகளான தினேஷ், அவனது நண்பன் என 3 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தி, செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்ததும்” தெரிய வந்துள்ளது. 

அதே போல், காசியின் கூட்டாளிகள் இன்னும் சிலர் பெண்களை மிரட்டி உள்ளதும் தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த கூட்டாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், காசி தொடர்பான வழக்கில் பல தடயங்களை அழித்ததாகவும், புகார் அளித்த பெண்ணொரு வரை மிரட்டியதாகவும் கூறி, காசியின் தந்தை தங்கப் பாண்டியனும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். மேலும், காசி வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரின் குடும்பத்தாரிடமும், காசி குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, சி.பி.சி.ஐ.டி. போலீசார், “என் தாய் பத்மாவதியை தாக்கியதாகவும், துப்பாக்கி முனையில் எங்களை மிரட்டியதாகவும்” காசியின் சகோதரி அன்ன சுதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

குறிப்பாக, இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சாத்தான் குளத்தில் நடந்தது போலவே காசிக்கும், அவரது தந்தைக்கும் நடக்கும் என போலீசார் மிரட்டியதாகவும்” கண்ணீர் மல்க பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

“சி.பி.சி.ஐ.டி. போலீசார், துப்பாக்கி முனையில் எங்களை மிரட்டுவதால், பயமாக இருக்கிறது என்றும், இதனால் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்” என்றும், கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “இந்த விசயத்தில், நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கா விட்டால், குடும்பத்துடன் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை” என்றும், காசியின் சகோதரி அன்ன சுதா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.