சென்னை ஆவடி அடுத்துள்ள தனியார் காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை, காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை ஆவடி அருகே உள்ள பொத்தூர் கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, பெங்களூருவை சேர்ந்த 12 வயது சிறுமி உட்பட பல சிறுமிகள் தங்கியிருந்து, வசித்து வருகின்றனர். 

குறிப்பாக, பெங்களூருவை சேர்ந்த 12 வயது சிறுமி, இந்த காப்பகத்தில் தங்கியிருந்த படியே, அந்த பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவி, தான் தங்கியிருக்கும் காப்பகத்திலேயே தங்கி இருந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் காப்பகத்தில் பணிபுரியும் காவலாளியான 40 வயது தேவேந்திரன், சிறுமியை தனியாக அழைத்து, வலுக்கட்டாயமாக அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வந்ததால், அவரது தாயார் சிறுமியை வந்து பார்த்துவிட்டு, தன்னுடன் சிறுமியையும் அழைத்துக்கொண்டு பெங்களூரு சென்று உள்ளார்.

அப்போது, தனது தாயாரிடம் மனசு விட்டுப் பேசிய அந்த 12 வயது சிறுமி, “காவலாளி தன்னை பாலியல் தொல்லை கொடுத்த தகவலை” கூறி இருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், தான் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி மீது திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம், சிறுமியின் தாயார் புகார் அளித்தார்.

சிறுமியின் தாயார் அளித்த புகாரைப் பெற்றுக்கொண்ட அந்த குழந்தைகள் நல கமிட்டியின் தலைவர் வனஜா முரளிதரன், அந்த புகாரை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தினார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர், இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், காப்பாக காவலாளி தேவேந்திரன், சம்மந்தப்பட்ட 12 வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, கடும் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், காவலாளி தேவேந்திரனை அதிரடியாகக் கைது செய்தனர். அதன் பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற உத்தரவுப் படி, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், கோவையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, பள்ளி வேன் ஓட்டுநர், உதவியாளருக்கு இயற்கையாக இறக்கும் வரை ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இந்த சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.