தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டபம்ர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்த வண்ணம் பரவி
வருகிறது. அதன் படி, தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்றே அதிகரித்து வருகிறது. 

அதே நேரத்தி்ல், தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை புதிய தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படாமல் அப்படியே ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மக்கள் கூடும் சில பகுதிகளில் மட்டும் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. 

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அப்போது, மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் முதலமைச்சர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

அத்துடன், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில், நோய்த் தொற்று பரவலை இன்னும் கட்டுப்படுத்தும் வகையில், அதிக அளவில் பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில், “வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை” விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் வரும் 23 ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பலரும் வலியுறுத்தினார்கள். அதன் படி, “பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுகத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும்” கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

“அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்துகொண்டதின் அடிப்படையில், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன், கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளதாக” தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. 

இதன் காரணமாக, “பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்ட்டு உள்ளது.

இவற்றுடன், “மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், வரும் 16 ஆம் தேதியில் இருந்து செயல்பட” அனுமதிக்கப்படுகிறது. 

அதே போல், “தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும், அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9 ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருகை தர வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

“பேராசிரியர்கள் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் வருகை தர வேண்டும் என்றும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.