ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு அதிகரித்து, 40 சதவீதம் முதல் 72 சதவீதம் வரை பட்டியலின மாணவர்கள் பலரும் தங்களது படிப்பை
பாதியிலேயே நிறுத்திவிட்டு, வெளியேறும் கொடுமை நடந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள 7 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்ந்த பட்டியலின மாணவர்கள் பலரும், தாங்கள் படித்து வரும் உயர் படிப்பை,
பாதியில் விட்டு வெளியேறுவது கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிகரித்து இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்களின் மூலமாக தற்போது தெரியவந்திருக்கிறது. 

இது குறித்து விவகாரங்களை, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த புள்ளி விபரங்களின் படி, “இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து 40 சதவீதம் முதல் 72 சதவீதம் வரையிலான பட்டியலின மாணவர்கள், தங்களது படிப்பைப் பாதியில் விட்டு அப்படியே வெளியேறி இருப்பதாக” குறிப்பிட்டு உள்ளது.

அத்துடன், “இந்தியாவில் உள்ள 7 ஐஐடி கல்வி நிறுவனங்களில், இளநிலை படிப்பில் இருந்து பாதியில் வெளியேறும் 10 மாணவர்களில் 6 பேர் மட்டுமே, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்” என்று மத்திய அரசின் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. 

இது தொடர்பாகத் தலித் மற்றும் பழங்குடியின நல அமைப்புகள், “உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்கள் சாதிய பாகுபாடுகளுக்கு ஆளாவதாக” தொடர்ச்சியாகப் புகார்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், “மாணவர்கள் தங்களது படிப்புக்கான இடங்களைத் தக்க வைத்து கொள்ளாவதற்காக, படிப்பில் சேரும் மாணவர்கள் விரும்பிய படிப்பில் இடம் கிடைத்தும் வெளியேறுவதும், சொந்த காரணங்களாலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்திருப்பதாக” மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான தெரிவித்திருக்கிறார்.

“இடை நிற்றல் அதிகரித்துள்ள உயர் கல்வி நிறுவனங்கள் வரிசையில், அசாம் மாநிலம் கவுகாத்தி ஐஐடி 88 சதவீதம் என்ற நிலையில் முதல் இடத்தில் உள்ளதாகவும், அந்த புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், டெல்லி ஐஐடி 2018 ஆம் ஆண்டில் படிப்பைப் பாதியில் விட்ட 10 மாணவர்களும் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தவர்கள் தான் என்றும், அங்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் 76 சதவீதம் பேர் தங்களது படிப்பை பாதியில் விட்டு வெளியேறி இருக்கிறார்கள்” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “சென்னை ஐஐடியில் கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் தங்களது படிப்பை பாதியில் விட்டு வெளியேறிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கையானது 10 பேராக உள்ளது. இந்த 10 மாணவர்களின், 6 பேர் பட்டியலின மாணவர்கள் என்றும், எஞ்சிய மற்ற 4 மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்” என்பதும், அந்த புள்ளி விபரங்களின் படி தற்போது தெரியவந்திருக்கிறது.

இதன் மூலமாக, இந்தியாவில் உள்ள ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு அதிகரித்து இருப்பதும், இதன் மூலமாக கிட்டதட்ட 40 சதவீதம் முதல், 72 
சதவீதம் வரை பட்டியலின மாணவர்கள் பலரும் தங்களது படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, வெளியேறும் மிக கொடுமையான சூழல், இன்றைய டிஜிட்டல் 
யுகத்திலும் தொடர்பாக பெரும் வேதனையாக இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.