திமுக வின் பொய் புகார் பிரச்சாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

திருவண்ணாமலை சேவூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய எழிலரசி என்கிற பெண், “ஆரணி புதுக்காமூர் பகுதியில் தனது வீட்டின் அருகில் எதிர்பாராத விதமாக நடந்த சிலிண்டர் விபத்தில், எனது தாய் சந்திரா உயிரிழந்து விட்டதாக” வருத்தப்பட்டார்.

அத்துடன், “இதற்காகத் தமிழக அரசின் சார்பில் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது என்றும், ஆனால் அந்த பணம் இது வரை எங்களுக்குக் கிடைக்கவே இல்லை” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். 

ஆனால், நிவாரண தொகை செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், தி.மு.க. வின் பொய் புகார் பிரச்சாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. 

அதாவது, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த சந்திராவின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் பணம் அறிவிக்கப்பட்டு, அந்த தொகையானது இறந்த சந்திராவின் மகன் முத்துக்குமரனின் இந்தியன் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. 

இதற்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தனது வங்கி கணக்கிலிருந்து மின்னணு பரிவர்த்தனை மூலம் முத்துக்குமரனின் இந்தியன் வங்கி கணக்கிற்கு அனுப்பப் பிறப்பித்த உத்தரவு சான்றாக உள்ளது என்றும், அந்த உத்தரவு நகல் இணைக்கப்பட்டுள்ளதையும், எழிலரசியின் சகோதரரான முத்துக்குமரனின் வங்கி கணக்கிற்கு நிவாரண தொகையைச் செலுத்த முழு சம்மதம் தெரிவித்து எழிலரசி கையொப்பமிட்டுள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது. 

உயிரிழந்த சந்திராவின் மகள்கள் எழிலரசி உள்ளிட்ட மூவரும் மகன் முத்துகுமரனும் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில், “எழிலரசி ஆங்கிலத்தில் கையொப்பமிட்டு உள்ளார். வாக்கு மூலம் படிவமே இதற்குச் சான்றாக உள்ளது” என்றும், தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், வாக்கு மூலத்தின் நகல் இணைக்கப்பட்டு உள்ளது என்றும், முதலமைச்சரின் நிவாரண தொகையைப் பெற்ற பின்பும் தொகை கிடைக்கவில்லை என்று அபாண்டமாக எழிலரசி பொய் சொன்னாரா? அல்லது தி.மு.க. வினர் திட்டமிட்டு எழிலரசியிடம் இவ்வாறு பேசுமாறு வற்புறுத்தினார்களா?” என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

எதுவாக இருந்தாலும், தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் தி.மு.கவினர் பொய் பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டுள்ளது இதன் மூலம் வெளி உலகத்திற்கு அம்பலமாகி உள்ளது. 

தமிழக அரசின் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. வினர், அப்பாவி பொது மக்களை வைத்து நாடகமாடி வருகின்றனர் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது என்றும், விமர்சனம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வு, அதிமுக - திமுக வினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.