கள்ளக் காதல் உறவால், கணவனை கொன்று விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் தான், இப்படியான ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்து உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்த 40 வயதான சிவக்குமார், தனது மனைவி 39 வயதான பாப்பாத்தி உடன் வசித்து வந்தார்.

சிவக்குமார், அதே பகுதியில் டிராக்டர் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். அவர், அதே பகுதியைச் சேர்ந்த இருவரை தன்னுடன் வேலைக்கு அமர்த்தினர். 

அப்போது, சிவக்குமாரிடம் வேலை பார்த்து வந்த 41 வயதான செல்வராஜ் என்பவருடன், சிவக்குமார் மனைவி பாப்பாத்திக்கு கள்ளக் காதல் உறவு இருந்து வந்திருக்கிறது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

இந்த கள்ளக் காதல் விசயம் எப்படியோ, சிவக்குமாருக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், இதனை கண்டித்ததுடன் செல்வராஜை பணி நீக்கம் செய்தார். 

இதன் காரணமாக, சிவக்குமாரை கொலை செய்ய மனைவி பாப்பாத்தி மற்றும் கள்ளக் காதலன் செல்வராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து திட்டம் போட்டனர். இந்த திட்டத்திற்கு, தங்களுக்கு உதவி செய்ய சிவக்குமாரிடம் வேலை பார்த்து வந்த மற்றொருவரான 43 வயதான அய்யனாரையும் கூட்டுக்குச் சேர்த்து உள்ளனர். அதன் படி, அவர்கள் 3 பேருமாக சேர்ந்து திட்டம் போட்டு உள்ளனர்.

திட்டமிட்டபடி, சம்பவத்தன்று சிவக்குமாருடன் சேர்ந்து அய்யனார் மது அருந்தி இருக்கிறார். கடும் மது போதையில் இருந்த சிவக்குமாரை, இருசக்கர வாகனத்தில் அவர் அழைத்து வந்திருக்கிறார். அப்போது, அந்த வாகனத்தை ஓட்டி வந்த அய்யனார், சாலையில் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவர் மீது தந்திரமாக மோதி, விபத்து ஏற்படுத்தி உள்ளார். 

அதன் பிறகு, சிவக்குமாரின் கழுத்தை இறுக்கி அவரை தாக்கி கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, விபத்தில் உயிரிழந்ததாக நாடகம் ஆடி உள்ளனர். 

அப்போது, சிவக்குமாரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து, பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமாரின் உத்தரவின் படி, இந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் படி, தேவதானப்பட்டி காவல் துறையினர், இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, கள்ளக் காதல் உறவுக்கு தடையாகவிருந்த காரணத்தால், கணவன் சிவக்குமாரை, அவரது மனைவியே கொலை செய்திருப்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து, சிவக்குமாரின் மனைவி பாப்பத்தி, செல்வராஜ், அய்யனார் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி, அதனை வாக்கு மூலமாகப் பதிவு செய்துகொண்டனர். அதன் பிறகு, அவர்கள் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.