தமிழக அரசு மருத்துவர்கள் அரசுக்கு நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா தொற்று உலகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கரோனா தடுப்புப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். கொரோனாவை கண்டு கொஞ்சமும் அஞ்சாமல், துணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பாக பணியாற்றியதில் அரசு மருத்துவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 

ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறப்பாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டதை எவரும் மறுக்க இயலாது. ஆனால், கரோனா தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய மருத்துவர்களின் நலனை தமிழக அரசு காப்பாற்றியதா என்றால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
 
தமிழக அரசு மருத்துவர்கள் அரசுக்கு நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, முதல் கோரிக்கை, மருத்துவர்களுக்கு அரசாணை 354- ன்படி 12 ஆண்டுகளுக்கான தகுதிக்கு ஏற்ற ஊதியம், இரண்டாவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்கள், மூன்றாவது, மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இடங்கள் மீண்டும் தரப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், நான்காவதாக, மருத்துவ பட்ட மேற்படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

 
தமிழக முதல்வர் அறிவித்த, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணம், தொற்று ஏற்பட்ட மருத்துவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் மற்றும் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டதற்காக மருத்துவர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியமும் இதுவரை தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டள்ளது. முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையிலும் அரசு மருத்துவர்கள் தங்களது பணியில் அயராது பணியாற்றி வருகிறார்கள். ஆனால், தமிழக முதலமைச்சர் அலட்சியப்போக்குடன் நடந்து கொள்வது நியாயமா? 
 
இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழகம் இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம். தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய மருத்துவ கல்லூரிகளையும், புதிய மருத்துவமனைகளையும் தொடங்குவதாலேயே நமது பெருமையை அடைந்துவிட முடியாது. அதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். தமிழக மக்கள் தொகை 7 கோடிக்கு மேலே இருக்கிற நிலையில், அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக இருப்பது குறித்து அ.இ.அ.தி.மு.க. அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஆனால், மருத்துவ கல்லூரிகளை அதிகமாக தொடங்கியிருக்கிறோம், மருத்துவ படிப்பிற்காக அதிக இடங்களை உருவாக்கியிருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதால் என்ன பயன் ஏற்படப் போகிறது?
 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவர்கள் தான் மிகுந்த துணிவுடன் களப்பணி ஆற்றினார்களே தவிர, கரோனாவை எதிர்கொள்ளாமல் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்படியே சில மருத்துவமனைகள் செயல்பட்டாலும், நோயாளிகளால் தாங்க முடியாத அளவிற்கு வசூல் வேட்டை நடத்தியதை எவரும் மறுக்க முடியாது. இதில் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு செயல்பட்டது அரசு மருத்துவர்களே தவிர, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகிற மருத்துவர்கள் அல்ல.
 
கண்ணுக்கே தெரியாத கிருமியை, மருந்தே கண்டுபிடிக்காத நிலையில், ஆயுதமின்றி களமிறங்கும் போர் வீரனைப்போல, உயிரை பணயம் வைத்து பணி செய்தவர்கள் அரசு மருத்துவர்கள். கரோனா உச்சத்தில் இருந்தபோதும் கூட, பணியிலிருந்து ஒதுங்கவில்லை. இரவு- பகல் பாராமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெருமை அரசு மருத்துவர்களுக்கு உண்டு. அவர்களின் கடுமையான உழைப்பின் காரணமாகவே கரோனா தொற்றுப் பரவலையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் தமிழகத்தில் குறைக்க முடிந்தது. இத்தகைய சாதனைக்கு சொந்தம் கொண்டாடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?
 
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற வகையில் 7 கோடி மக்கள் தொகைக்கு தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 70 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இருப்பதோ 18 ஆயிரம் மருத்துவர்கள் தான். ஆனால், தமிழக முதலமைச்சர் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பது குறித்தும், 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்குவது குறித்தும் தேர்தலை மனதில் கொண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில் எந்த கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்காதபோதும், அரசு மருத்துவர்களின் கோரிக்கையை புறக்கணிக்கிற நிலையில், இதுபோன்ற அறிவிப்பால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது? 
 
2 ஆயிரம் மினி கிளினிக்குகளுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் மருத்துவர்களாவது நியமனம் செய்யப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை இங்கே அமர வைப்பதன் மூலம் மொத்த பொது சுகாதார கட்டமைப்பே சீர்குலைந்துவிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
 
எனவே, கொரோனா தொற்றுக் காரணமாக கடுமையான பாதிப்பிலிருந்து மக்களின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்களின் நீண்டகால நான்கு அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென தமிழக முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.