அருப்புக்கோட்டை அருகே காதல் விவகாரத்தில் காதலன் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி கே.வாகைக்குளத்தை சேர்ந்தவர் மீனாட்சி இவருடைய மகன் சக்திசிவா . சென்னையில் உள்ள தனியார் நிறுவணத்தில் பணிபுரிந்து வருகிறார். சக்திசிவா அதே பகுதியை சேர்ந்த சுதா என்பவரின் மகள் புவனேஸ்வரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 22-ம் தேதி ஊருக்கு வந்த சக்திசிவா புவனேஸ்வரியுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவீட்டாரும் சக்திசிவா மற்றும் புவனேஸ்வரியை பல இடங்களில் தேடியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை சக்திசிவாவின் வீட்டிற்கு உறவினர்களுடன் வந்த புவனேஸ்வரியின் தாய் சுதா தனது மகளை எங்கே என பிரச்னை செய்துள்ளார். அப்போது திடிரென சக்திசிவாவின் தாயார் மீனாட்சியை சுதா மற்றும் அவருடைய உறவினர்கள் தரதரவென இழுத்துச்சென்று மானபங்கபடுத்தி சாலையில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பரளச்சி போலீசார் மீனாட்சியை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக சுதா அவரது உறவினர்கள் நாகவள்ளி, செல்வி, துரைப்பாண்டி , உள்ளிட்ட 14 பேர் மீது பரளச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாட்சியின் உறவினர்கள் அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் திடீரென அருப்புக்கோட்டை அரசு மருத்துமனை முன்பு மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த நகர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானம் செய்து பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். போலீசாரின் சமாதானத்தை ஏற்ற மீனாட்சியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.