சிவகங்கையில், தங்கை உடனான காதலை கை விட மறுத்த இளைஞரை, பெண்ணின் அண்ணன் வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்தி வேல், பொறியியல் படித்து முடித்து விட்டு, வேலைத் தேடிக்கொண்டிருந்தார். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே, அதே ஊரில் கோயில் கட்டுவது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிவேல் குடும்பத்திற்கும் சுப்பிரமணியன் மகன் சக்தி வேல் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சுப்பிரமணியன் மகன் சக்தி வேலும், கண்ணன் மகன் மணிவேலும் பார்க்கும் இடங்களில் எல்லாம் முறைத்துக்கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மணி வேல் தங்கை கீர்த்திகா உடன் சக்தி வேல் அவ்வப்போது நட்பாக கபேசி வந்துள்ளார். அதுவே, நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இந்த காதல் கதை, அந்த பகுதியில் பலருக்கும் தெரிய வந்தது.

ஏற்கனவே ஊரில் கோயில் கட்டுவது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருப்பதும், இதன் காரணமாக இரு குடும்பத்தாரும் பேசிக் கொள்ளாத சூழ்நிலையில் இவர்கள் காதல் விவகாரம் இருவரின் குடும்பத்திற்கும் தெரிய வந்தது. இதனால், அந்த இரு குடும்பத்திற்கு இடையேயான பகையானது, மேலும் அதிகரித்தது.

தங்கையின் காதலால் ஆத்திரமடைந்த மணிவேல், “என் தங்கையிடம் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று, சக்திவேலிடம் பல முறை நண்பர்கள் மூலமும் நேரடியாகவும் எச்சரிக்கை செய்துள்ளார். 

ஆனால், அந்த மிரட்டலை கண்டுகொள்ளாத சக்தி வேல், காதலியுடன் பேசுவதை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளார். இந்த தகவலும், மணிவேலுக்கு தெரிய வந்தது. இதனால், இன்னும் ஆத்திரமடைந்த மணிவேல், நேற்று இரவு நன்றாக மது குடித்துள்ளார். அதன் பிறகு போதை நன்றாகத் தலைக்கு ஏறிய நிலையில், நேராக சக்திவேலின் வீட்டிற்கு அவர் சென்று உள்ளார்.

அங்கு, மாடியில் படுத்திருந்த மணிவேலிடம் சென்றுள்ளார். சக்தி வேல் வரும் சத்தம் கேட்டு மணிவேல் கண் விழித்ததும், சக்திவேல் கத்தியோடு நிற்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்த நொடியே “நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா டா?” என்று ஆவேசமாகப் பேசி விட்டு, கண் இமைக்கும் நேரத்தில், சக்தி வேலை கீழே தள்ளி வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தி உள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்தி வேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த திருவேகம்பத்தூர் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மணிவேலை தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து, தற்போது அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.