கடந்த 5ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அவருக்கு தீவிரமனது என்று செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து, தான் நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வீடியோ வாயிலாக தெரிவித்திருந்தார் எஸ்.பி.பி.

ஆனால் நாளடைவில் வயது முதிர்வினால் அவருக்கு கொரோனா நிஜமாகவே தீவிரமடையத் தொடங்கிவிட்டது. ஏறத்தாழ ஒரு வாரத்துக்குப் பிறகு, அவர் மிக தீவிரமான நிலையில் இருப்பதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனையே தெரிவித்தது. ஆக.13ம் தேதி நள்ளிரவு நேரத்தில் அவரின் உடல்நிலை மோசமாகிவிட்டதாக மருத்துவமனை தரப்பு கூறியிருந்தது. அதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திரையுலகினர் உட்பட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரையுலகில் உச்ச நடிகர் ரஜினி முதல் இசையலமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் என பலரும் எஸ்.பி.பி குணமடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரார்த்தனை செய்தனர். தினமும் மாலை இதுதொடர்பாக தன் தந்தையின் அன்றைய ஹெல்த் அப்டேட்டை வெளியிட தொடங்கினார் எஸ்.பி. சரண்.


 
அப்படியான சூழலில், இன்று காலை எஸ்.பி.சரணின் பெயரில் ட்விட்டரில், ஒரு செய்தி வெளிவந்தது. அதில், அவருக்கு செயற்கை சுவாசம், நுரையீரல் செயலிழப்பு காரணமாக எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, எஸ்.பி.பி. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் அவரது இதயத்துடிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை சமநிலையில் இருந்து வருவதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருந்தார் எனக்கூறப்பட்டது.

மேலும், எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று குறித்த ஆய்வில் நெகடிவ் என வந்துள்ளது என்ற பதிவினை அவரது மகன் எஸ்.பி.பி. சரண் பதிவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. கொரோனா தொற்று நெகடிவ் என்றான நிலையிலும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், அந்த வீடியோ வதந்தி எனக்கூறி, வீடியோ வடிவில் தற்போது சரண் மற்றொரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதில் ``வழக்கமாக மருத்துவர்களுடன் பேசிவிட்டுதான் அப்பாவின் உடல்நிலை பற்றி உங்களிடம் கூறுவேன். ஆனால், இன்று காலை வேறு வழியின்று ஒரு பதிவு போட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பாவின் உடல்நிலை பற்றி என்னிடம் மட்டும்தான் மருத்துவமனையிலிருந்து தகவல் சொல்லப்படும். அதைத்தான் நான் பிறகு ஊடகங்களிடம் தெரிவிப்பேன்" எனக்கூறியிருந்தார்.

அதன்பிறகு, எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து நேற்று இரவு வீடியோ வெளியிட்டார் சரண். அதில்,

``கடந்த இரண்டு வாரங்களாக அப்பாவை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் இன்று அப்பாவை போய் பார்த்தேன். மருந்தினால் சற்று மயக்க நிலையில் இருந்தாலும் ஓரளவு விழிப்புடனேயே இருந்தார். என்னை பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அனைவருடைய பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் அவரிடம் சொன்னேன். அவர் உறுதியாக இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என்றும் கூறினேன். அவர் தனது கட்டை விரலை உயர்த்தி காட்டினார்.

நான் எப்படி இருக்கிறேன் என்றும் அம்மா எப்படி இருக்கிறார் என்றும் சைகை மூலம் கேட்டார். அப்பாவை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. அவருக்கும் என்னை பார்த்ததில் சந்தோஷம். இனிமேல் தினமும் அவரை போய் பார்ப்பேன்.

அவர் அறையில் ஒலிக்கும் பாடல்கள் அப்பாவுக்கு கேட்கிறது. அவரது படுக்கை அருகில் கடவுள் படங்கள் உள்ளன. அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் எங்கள் குடும்பம் நன்றி கடன் பட்டுள்ளது. அப்பா விரைவில் மீண்டு வந்து எல்லோரையும் சந்திப்பார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

இந்நிலையில் எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

``இன்றைய நாள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானது. காரணம், அப்பாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் 90% மயக்க நிலையில் இருந்து அவர் மீண்டுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும், எங்கள் குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி. சிகிச்சைக்கு, முன்பைவிட அதிகமாக அவரின் உடல் ஒத்துழைப்பை தருகிறது. நிச்சயம் மிகவிரைவில் அவர் மீள்வார் என நம்புகிறோம்" என்றார்