2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். 

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

இந்தப் படத்தை கடந்த ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில், இந்தப் படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்று சூர்யா அறிவித்தார். முன்னணி ஹீரோ ஒருவரின் படம், ஓடிடி தளத்தில் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தியது.

சூர்யாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. விநியோகஸ்தரும் தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகியுமான திருப்பூர் சுப்ரமணியம் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தியேட்டர்கள் அதிபர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து 5 படங்களில் பணியாற்றியுள்ள இயக்குனர் ஹரியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள். ஒரு ரசிகனாக உங்கள் படத்தைத் தியேட்டரில் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி. OTT-யில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்.

சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால்தான் அதற்கு மரியாதை படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் ஓர் அங்கீகாரம். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும். இவ்வாறு இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.