8 ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்படுத்தி, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முன்னாள் ஆசிரியர் மீது போக்சோ சட்டம் தற்போது பாய்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து உள்ள லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ராஜா, ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்து விட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில், அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆரணியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். இவர், அந்த பள்ளியின் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்தார்.

அப்போது, அதே பள்ளியில் ஆரணி டவுன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 8 ஆம் வகுப்புப் படித்து வந்தார். அந்த மாணவியிடம் அடிக்கடி இந்த ஆசிரியர் ராஜா நன்றாக பேசி சிரித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, ஆசிரியர் ராஜாவுக்கும், அந்த 8 ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. 

அதன் பிறகு, ஆசிரியர் ராஜா குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது அரசுப் பணியில் சேர்ந்து, அங்கு பணியாற்றி வருகிறார். 

அத்துடன், இவர் கடந்த 4 ஆண்டுகாலமாக திருவாரூர் மாவட்டத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றி வருகின்றார். ஆனாலும், பள்ளியை விட்டு அரசு பணிக்கு ஊர் விட்டு ஊர் வந்த போதும், ஆரணியைச் சேர்ந்த பள்ளி மாணவியுடன் ஏற்பட்ட நட்பு, தற்போதும் தொடர்ந்துக்கொண்டே வந்துள்ளது. 

இப்படியான நிலையில், முன்னாள் ஆசிரியர் ராஜா, அந்த பள்ளி மாணவியிடம் தொடர்பில் இருந்து வந்தது அந்த மாணவியின் பெற்றோருக்கு கடந்த 16 ஆம் தேதி தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், தங்களது மகளிடம் விசாரித்து உள்ளனர். அவரும், ஆசிரிருடனான தொடர்பு பற்றி எல்லாம் கூறி அழுது உள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், முன்னாள் ஆசிரியர் ராஜா மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், “முன்னாள் ஆசிரியர் ராஜா, பள்ளியிலிருந்து சென்ற பிறகும் மாணவி உடனான தொடர்பினை நீட்டித்து வந்ததும், ஆரணியிலுள்ள அவரது வீட்டுக்கு அடிக்கடி வரும் ராஜா மாணவியை, அவரது பெற்றோருக்குத் தெரியாமல் சந்தித்து தனிமையில் பேசி வந்தும்” போலீசாருக்கு தெரிய வந்தது.

அத்துடன், “அந்த ஆசிரியர், கடந்த 4 ஆண்டுகளாக மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, தனக்குத் திருமணமானதை மறைத்து பேசி வந்ததும்” கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் முன்னாள் ஆசிரியர் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் அதற்குள் தலைமறைவாகி விட்டார். இதனால், அவைர தேடும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.