நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று வீர வணக்கநாளையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. 

உயிர்நீத்த போலீசாருக்கு அந்தந்த பகுதி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர். கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காவல்துறையினர் கருப்பு பட்டை அணிந்து நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காவலர் வீரவணக்க நாளையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல நாட்டின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.  

இன்று காலை, தமிழக டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தின் முன் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதேபோல நீத்தார் நினைவு தினத்தையொட்டி அரியலூர், நாகை உள்பட தமிழகம் முழுவதும் காவல் துறையினர் மரியாதை செலுத்தினர்.

மேலும் பிரதமர் மோடி இன்று தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

''சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதில் இருந்து, கொடூரமான குற்றங்களைக் களைவது வரை, பேரிடர் மேலாண்மையில் உதவி செய்வது முதல் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவது வரை, மக்களுக்குத் தங்கள் சேவையை வழங்குவதில் நம் காவல்துறை ஊழியர்கள் எப்போதும் தயக்கமின்றி தங்களால் ஆன சிறந்ததை வழங்குகிறார்கள். நாட்டு மக்களுக்கு உதவும் அவர்களின் ஆர்வம் மற்றும் தயார் நிலை குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம்.

வீர வணக்க நாள் என்பது இந்தியா முழுவதும் உள்ள காவல்துறை ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகும். கடமையின்போது உயிர்த் தியாகம் செய்த அனைத்துக் காவல்துறையினருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நம் நினைவில் இருக்கும்''.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் காவலர்களுக்கு மரியாதை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருக்கும் பதிவில்,

``ஆண்டுதோறும் அக்.,21ம் தேதி காவலர்கள் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு இன்று மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி திரிபாதியும், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், காவலர்களின் வீர வணக்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில்,”சமூகத்தின் பாதுகாவலனாய், பொதுமக்களின் உற்ற தோழனாய், அர்ப்பணிப்பின் இலக்கணமாய், தங்களின் அயராத உழைப்பால் அல்லும் பகலும் மக்கள் பணியாற்றிடும் அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை தேசிய காவல்துறை தின நாளில் நினைவு கூர்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.