அதிமுக வில் இருந்து, அமமுக விற்கு சென்ற ராஜவர்மனை “சீட்டு கிடைக்காததால் ஓடினாயே..” உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஒருமையில் பேசி விமர்சித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த காலங்களில் எது பற்றி கருத்து கூறினாலும் அது சர்ச்சைக்குறிய கருத்தாக வே பார்க்கப்பட்டு வந்தது. இதனால், சில காலம் அவர் ஊடகத்தில் தனது கருத்துக்களை பதிவு செய்யாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், தமிழக தேர்தல் களம் தற்போது சூடுப்பிடிக்கத் தொடங்கி உள்ளதால், பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர் கட்சியினரை மிக கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர்.

அதன் படி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் அங்குள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது, அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி, “விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் இரட்டை இலை வெற்றி பெற வேண்டும். ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும்” என்று, சூளுரைத்தார். 

“திமுக, அதிமுகவை அழிக்க நினைக்கிறது. அதனால், திமுகவை நாம் வேரோடு அழிக்க வேண்டும்” என்றும், வீர வசனங்கள் பேசினார். 

அத்துடன், “உழைப்பை நம்பி பிழைக்க கூடியவர்கள் அதிமுக வினர் என்றும், பிறரை நம்பி பிழைப்பவர்கள் திமுக வினர்” என்றும், ஏக போக வசனங்களை அடிக்கினார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

மேலும், “திமுக வில் இருப்பவர்கள் நோயாளிகள் போல் உள்ளவர்கள் என்றும், அதிமுகவில் உள்ளவர்கள் இளைஞர்கள்” என்றும், விமர்சனம் செய்தார்.

குறிப்பாக, அதிமுக வில் இருந்து, அமமுக விற்கு சென்ற ராஜவர்மனை “சீட்டு கிடைக்காததால் ஓடினாயே.. ஓடுகாலிபயலே..” என்று, மறைமுகமாக அமைச்சர்
ராஜேந்திர பாலாஜி, மிக கடுமையாக விமர்சித்து பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்ற தேர்தலால், வரும் ஆண்டு அதிமுக விற்கு பொற்காலம் என்றும், ஏனென்றால் புல்லுறுவிகள் ஓடி விட்டார்கள். அருப்புக்கோட்டை எம்ஜிஆர் கோட்டை ஜெயலதாவின் கோட்டை எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டை, ஓ.பன்னீர் செல்வத்தின் கோட்டை அருப்புக்கோட்டையில் இரட்டை வெற்றி பெற்றது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும்” என்றும், வசனம் பேசினார். 

“வைகைச் செல்வனுக்கும் எனக்கும் முன்பு சில பிரச்சனைகள் இருந்தாலும், வைகைச் செல்வன் அற்புதமான மனிதர் என்றும், அவரை நல்ல மனிதர் என்று தான் நான் கூறுவேன்” என்றும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த சர்ச்சைக்குறிய பேச்சு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, நேற்றைய தினம் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, “சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா” என்று, திமுக வை, மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசியது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.