கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது. “இது, 2 வது அலையின் தாக்கம் என்று சிலர் கூறிக்கொண்டாலும், இது 3 வது அலையின் தாக்கம்” என்று சிலர் சொல்லத் தொடங்கி உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்த வரையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு வேகமெடுத்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது. கொரோனாவை தடுக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் மத்திய - மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இது தொடர்பாக தனி கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் அடிக்கடி கலந்துரையாடி, பல்வேறு ஆலோசனைகளையும், தடுப்பு முறைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தான், இந்தியாவில் கடந்த சமீபத்திய நாட்களாக கொரோனா பெருந் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சுமார் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இப்படியாக, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கை இது வரை 3 கோடியை தாண்டி உள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவி வருவதால், குஜராத் மாநிலத்தைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் 2 நகரங்களில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மீண்டும் மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலமாகக் கலந்துரையாடல் நடத்துகிறார். இந்த நிகழ்வில், மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை அவர் கேட்டறிகிறார். அத்துடன், தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

அப்போது, “ஊரடங்கை விட பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்த” பிரதமர் அறிவுறுத்துவார் என்றும், கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, கொரோனா தொற்று பரவலைக் குறைப்பதற்கான ஆலோசனைகளையும், தடுப்பூசி போடும் பணிகளை மேலும் வேகப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் பிரதமர் மோடி வழங்குவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. 

இந்தியா முழுமைக்கும் கொரோனா தொற்று சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது கடந்த 12 நாட்களாக மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் காணொலி காட்சி மூலமான இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.