சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் புகார் குறித்து, அப்பள்ளியில் டிரஸ்டிகளில் ஒருவரான நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளான பாஜாக வை சேர்ந்த மதுவந்தினி விளக்கம் அளித்து உள்ளார்.

“PSBB பள்ளியை நானோ அல்லது என் மகளோ நிர்வகிக்கவில்லை” என்று, ஆசிரியர்  ராஜகோபால் மீதான பாலியல் புகார் குறித்து, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் நேற்றைய தினம் விளக்கம் அளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது அவரது மகளும் பாஜாக வை சேர்ந்தவருமான மதுவந்தினி புது விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராஜகோபால் மீது, மாணவிகள் ஏராளமானோர் பாலியல் புகார்களைக் கூறியுள்ளனர்.

இந்த பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் மாணவர்கள் குற்றச்சாட்டி புகார் அளித்து உள்ளனர். தமிழகத்தில் இந்த பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்து உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களிலும் டிரெண்டிங்காகி விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிற்கு ஆளான பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது தற்போது பல்வேறு தரப்பினரும் எதிர்மறையான கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவது குறித்து, மதுவந்தி விளக்கம் அளித்து உள்ளார்.

அதில், “பள்ளி அறக்கட்டளை உறுப்பினராக எனது தந்தை ஒய்.ஜி. மகேந்திரன், தேவையான நடவடிக்கை எடுக்க மின்னஞ்சல் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளி நிர்வாகம் PSBBயில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு விடுத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல், இது போன்ற குற்றங்கள் இழைத்தவர்களைத் தகுந்த தண்டனை பெற்றுத்தரப் பள்ளி நிர்வாகத்துக்கு உறுதுணையாக நின்று மேலும் இது போன்ற குற்றங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாகவும்” குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “இந்த விவகாரம் குறித்து, ராஜகோபாலன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதைவிட வேறு அசிங்கம் கிடையாது என்றும், அவர் தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், கூறியுள்ளார். 

“ஆனால், ஒரு தனிப்பட்ட ஆசிரியர் செய்த காரியத்திற்காக, ஒட்டு மொத்த பள்ளி நிர்வாகத்தையே தவறாக பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், இந்த பள்ளி தான் என் பாட்டியின் பாரம்பரியம். பாட்டி ஒஜிபி கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த பள்ளி கெட்டுப்போக விடமாட்டேன்” என்றும், அவர் ஆவேசமாகப் பேசி உள்ளார்.

மேலும், “ஆமாம், இது என் பள்ளி தான்” என்று குறிப்பிட்டுப் பேசிய மதுவந்தி, “நான் இந்த பள்ளியை நடத்தவில்லை என்றாலும், என் பாட்டியின் பள்ளி என்கிற முறையில், என் அப்பா ஒரு பொறுப்பில் இருப்பதாலும், ராஜகோபாலன் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

“இந்த பிரச்சனையில், சாதியை உள்ளே கொண்டு வந்து அரசியல் செய்வதுதான் வேதனை அளிக்கிறது என்றும், பாஜகவில் நான் இருப்பதாலேயே என்னை வைத்து சாதி அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்” என்றும், அவர் ஆவேசத்துடன் பொங்கி உள்ளார். 

“அதற்காக சாதி அரசியலை உள்ளே கொண்டு வரும், சாதி ரீதியாக பேசும் கோமாளிகளை விடமாட்டேன் என்றும், கேள்வி கேட்கத்தான் செய்வேன். அதற்கு இந்த கோமாளிகள் அடக்கிக் கொள்ள வேண்டும்” என்றும், மதுவந்தி மிகவும் ஆவேசமாக அந்த வீடியோவில் பேசி உள்ளார். மதுவந்தி பேசிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.