“காதலை ஏற்க மறுக்கும் பெண்களிடம், தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்துத் துன்புறுத்துவது, கொலை செய்வது, அமில வீச்சு ஆகியவை நாட்டில் அதிகரித்து 
வருவது” தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து 
அதிகரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்த வரையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் வட மாநிலங்களில் தான் அதிகமாக நடைபெற்று 
வருகிறது. ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவலாகக் காணப்பட்டு 
வருகின்றன.

இப்படி இருக்கும் சூழலில், கடந்த 30 ஆம் தேதி என்று, கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் 24 வயது மருத்துவ மாணவி ஒருவர், அவரது சமூக ஊடக நண்பரால் பட்டப்பகலில் கொடூரமான முறையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். 

அதுவும், ஒரு தலை காதலை ஏற்கவில்லை என்பதற்காக, அந்த பெண்ணை ஒரு தலை காதலன் சுட்டுக் கொன்றிருக்கிறார். பின்னர், அந்த இளைஞனும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்த சம்பவம், கேரளா மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், இந்த சம்பவம் பற்றி நேற்றைய தினம் சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பி.டி. தாமஸ், அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். 

அப்போது, கேரள சட்டப் பேரவையில் மற்ற எம்எல்ஏக்களின் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், “காதல் என்ற பெயரில், பெண்களைத் துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராகக் காவல் துறை ஒரு போதும் மென்மையாக நடந்து கொள்ளாது” என்று, காட்டமாகவே பதில் அளித்தார். 

அத்துடன், “சமூகத்தில் காதலை ஏற்க மறுக்கும் பெண்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் கடுமையாக எச்சரித்தார்.

மேலும், “இது போன்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு மிக கடும் தண்டனை வழங்கப்படுவது தொடர்ந்து உறுதி செய்யப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

குறிப்பாக, “பெண்களை அச்சுறுத்துதல், பின் தொடர்தல் உள்ளிட்ட புகாருக்கு ஆளான நபர்களைக் காவல் துறையினர், தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும், யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது” என்றும், பினராயி விஜயன் கட்டமாகவே பதில் அளித்தார்.

இந்தியாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தானுக்கு அடுத்த இடத்தில் கேரளா மாநிலம் இருப்பதாகவும், சமீபத்தில் செய்திகள் வெளியானது. 

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 1455 வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பதிவு செய்யப்பட்ட பலாத்கார வழக்குகள் 256 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.