தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு மாவட்ட அளவில் சென்னை
மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது, பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை சற்று ஓய்ந்திருந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் எகிறி
உள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா
தொற்று பாதிப்பு உறுதி” செய்யப்பட்டு உள்ளது. 

“இதன் மூலமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,20,77,706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 490 பேர்
உயிரிழந்துள்ளனர். 

அதே போல் தான், தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் கிட்டதட்ட 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து இருக்கிறது.

அதில் மிக முக்கியமாக, கொரோனா தொற்று பாதிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு மாவட்ட அளவில் தமிழகத்தின் தலைநகர் சென்னை மாவட்டம், மீண்டும்
முதலிடத்திற்கு வந்திருக்கிறது. அந்த அளவுக்கு சென்னையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது.

மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்துவந்த நிலையில் மீண்டும் சென்னையில் அதிக பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது, சென்னை மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது.

அதிக அளவிலான நெருக்கடியான சூழல் கொண்ட சென்னையில், மக்கள் பொது வெளியில் அதிக அளவில் சென்று வருவதாலும், கூட்டம் கூட்டமாக மக்கள்
போதுமான கொரோனா விதிகளை பின்பற்றாமல் இருப்பதே மீண்டும் தொற்று பரவ முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

முக்கியமாக, சென்னையில் 200 பேருக்கு குறைவாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, நேற்று ஒரே நாளில் 243 ஆக அதிகரித்து உள்ளது. 

அத்துடன், கடந்த 11 நாட்களில் சென்னையில் 2 ஆயிரத்து 156 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னைக்கு அடுத்தப்படியாக, கோவையில் கொரோனா பாதிப்பு விகிதம் சற்று குறைந்து வருகிறது. கோவையில், ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா தொற்று
உறுதியாகி இருக்கிறது. கோவையை பொறுத்த வரையில், கடந்த 11 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 494 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

மேலும், தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து இருக்கும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் 79
ஆக இருந்த கொரோனா பாதிப்பானது, நேற்றைய தினம் 98 ஆக உயர்ந்திருக்கிறது.

அதே போல், திருச்சியில் நேற்று முன் தினம் 68 ஆக பதிவாகி இருந்த கொரோனா பாதிப்பு, நேற்றைய தினம் 78 ஆக பதிவாகி உள்ளது. 

புதுக்கோட்டையில் 32 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 39 ஆகவும் அதிகரித்திருக்கிறது. 

இதே போல தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொற்று விகிதம் சற்று உயர்ந்திருக்கிறது.

ஆனாலும், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்றின் பாதிப்பானது சற்று ஏற்ற இறக்கத்துடன் 2 ஆயிரத்தை நெருங்கியே பதிவாகி வருகிறது. 

அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1964 பேருக்கு கொரோனா உறுதி பரவி இருக்கிறது. இதன் மூலமாக கடந்த 11 நாட்களில் 15 லட்சத்து 60
ஆயிரத்து 754 பேருக்கு பரிசோதனை செய்ததில், 21 ஆயிரத்து 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையானது, 20 ஆயிரம் என்ற எண்ணிக்கை அளவிலேயே தொடர்ந்து நீடித்து
வருவது குறிப்பி்டத்தக்கது.