பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தனது கணவரான போலீஸ்காரர் மீது அவரது மனைவி பல்வேறு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை நாராயணபுரம் சிவமணி தெருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுபாஷினி. இவர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ராஜமாணிக்கம் என்பவரது மகன் முத்துசங்கு என்பவரைக் கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், முத்துசங்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி புரிவதாகப் பெண் வீட்டில் பொய் சொல்லி கல்யாணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், உண்மையில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் அரசு இல்லத்தில் பாதுகாவலாக பணிபுரிந்து வந்த நிலையில், உதவி ஆய்வாளராகப் பணி புரிவதாகப் பொய் சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில் தான், “என்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக” தனது கணவரான போலீஸ்காரர் முத்துசங்கு மீது அவரது மனைவி சுபாஷினி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், “முத்துசங்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி புரிவதாகக் கூறியதால், எங்கள் வீட்டில் அவருக்குத் திருமணத்தின் போது, வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், 25 பவுன் தங்க நகைகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டதாகவும்” குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “திருமணமான அடுத்த 3 மாதத்தில் மேலும் வரதட்சணை பணம் கேட்டு என்னை அவர் கொடுமைப்படுத்தினார் என்றும், முத்துசங்குவின் கொடுமைகள் எல்லை மீறி போகவே ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தோம்” என்றும், சுபாஷினி கூறியுள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, போலீசான கணவன் முத்துசங்கு மீது தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு புகார் செய்யப்பட்டது என்றும், ஆனால், அவரோ “முன்னாள் அமைச்சர் ஒருவருக்குப் பாதுகாப்புப் பணியில் இருப்பதாகக் கூறி, என் புகாருக்குப் பதில் கூறாமல் இருந்து வந்தார்” என்றும், சுபாஷினி குறிப்பிட்டு உள்ளார்.

இதனையடுத்து, “கணவன் முத்துசங்கு, எனது பெற்றோருடன் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை நடத்தியதால், எனது பெற்றோர் என்னை அவருடன் சேர்ந்து வாழும் படி அனுப்பி வைத்தனர் என்றும், நானும் அவரை நம்பி மீண்டும் சேர்ந்து வாழ வந்தேன் என்றும், ஆனால், அவர் எனக்குத் தொடர்ந்து 
பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல் செய்து, என்னை கொடுமைப்படுத்தினார்” என்றும், குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “எனது கணவர் போனை நான் ஆய்வு செய்த போது, அதில் பல பெண்களுடன் ஆபாசமாகப் பேசியது, ஆபாசமாகக் குறுஞ்செய்தி அனுப்பியது, ஆபாசமான படங்களையும் வீடியோக்களையும் பல பெண்களுக்கு ஷேர் செய்தும், தொடர்ச்சியாகப் பேசி வந்ததும் தெரிய வந்தது.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த சுபாஷினி, “மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் கணவர் முத்துசங்கு மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி” புகார் மனு அளித்து உள்ளார். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.